காங்கிரசுக்கு தலைமை தாங்க ராகுல் மறுப்பு 2024 தேர்தல் வரை சோனியாதான் தலைவர்? போர்க்கொடி தூக்கிய ஆசாத், சச்சினுக்கு முக்கிய பதவி

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் வரையிலும் சோனியா காந்தியே காங்கிரஸ் இடைக்கால தலைவராக நீடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். பின்னர், கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். உடல் நலக்குறைவால் அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி உள்ளார். இதனால், காங்கிரஸ் தலைமை குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துகள் நிலவி வருகின்றன.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமென கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் பதவியேற்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, வரும் 2024 மக்களவை தேர்தலை சோனியா காந்தி தலைமையிலேயே காங்கிரஸ் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், கட்சியில் புதுமுகங்களுக்கு சில முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. முக்கிய விஷயங்களில் முடிவெடுக்க சோனியா மற்றும் ராகுலுக்கு உதவ 4 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குலாம் நபி ஆசாத், சச்சின் பைலட், குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், ரமேஷ் சென்னிதலா ஆகியோரில் 4 பேர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம், கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள பிரியங்கா காந்திக்கு புதிய பதவி கொடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் தலைமையில் உபி தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* பஞ்சாப்பில் சித்துவின் ஆதிக்கம் ஓங்குகிறது

கட்சி தலைமையில் மட்டுமின்றி, பல மாநிலங்களிலும் காங்கிரசில் உட்கட்சி பூசல் முற்றி உள்ளது. குறிப்பாக, பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங், சித்து இடையே மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது. இதில், அமரீந்தர் எதிர்ப்பை மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை கட்சி தலைமை நியமித்துள்ளது. சமூக வலைதளத்தில் இழிவாக பேசியதால் பொது வெளியில் தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காத வரை சித்துவை சந்திக்க மாட்டேன் என அமரீந்தர் கூறி வருகிறார். ஆனால், சித்துவுக்கோ கட்சியில் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிக்கிறது. நேற்று பொற்கோயிலுக்கு சென்ற சித்துவுடன் கட்சி எம்எல்ஏக்கள் 62 பேர் புடை சூழ சொகுசு பஸ்சில் உடன் சென்றனர். அவர்கள் அனைவருமே சித்து, அமரீந்தரிடம் மன்னிப்பு கேட்கக் கூடாது என பேட்டி தந்துள்ளனர். பஞ்சாப் சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு 80 எம்எல்ஏக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: