சேலத்திற்கு பூண்டு வரத்து அதிகரிப்பு கிலோ ₹35 முதல் ₹110 வரை விற்பனை

சேலம் :ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ₹35 முதல் ₹110 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் செவ்வாய்பேட்டை, லீபஜாரில் உள்ள மளிகை மார்க்கெட்டிற்கு வட மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் வரத்து இருந்து வருகிறது. இதில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளது.

டன் கணக்கில் லாரிகளில் வந்திறங்கும் பூண்டுகளை குடோன்களில் வியாபாரிகள் அடுக்கி வைத்து வருகின்றனர். அதிகளவு பூண்டு வரத்து இருப்பதனால், விலையும் பெருமளவு குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ பூண்டு ₹100 முதல் ₹180 வரையில் விற்கப்பட்டது. அதுவே தற்போது தரம் வாரியாக பிரித்து, ஒரு கிலோ ₹35 முதல் ₹110 வரையில் விற்கப்படுகிறது. இங்கிருந்து சில்லரை வியாபாரிகள், பூண்டு மூட்டைகளை வாங்கிச் செல்கின்றனர். விழுப்புரம். கள்ளக்குறிச்சி, ஆத்தூர், வாழப்பாடி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூண்டு வாங்கிச் செல்கின்றனர்.

அதேபோல், சில்லரை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், கூடைகளில் 2, 3 தரத்திலான பூண்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, பைக்கில் சென்று வியாபாரம் பார்க்கின்றனர். இதனால், தெருக்களில் பூண்டு வியாபாரம் களை கட்டியுள்ளது.

இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ‘‘நடப்பாண்டு ராஜஸ்தான் பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை பெருமளவு சரிந்துள்ளது. அதிகபடியான வியாபாரிகள் வந்து பூண்டு மூட்டைகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். சில்லரைக்கு பொதுமக்களும் நேரடியாக வந்து பூண்டு வாங்குகின்றனர்,’’ என்றனர்.

Related Stories: