மான்செஸ்டர்: இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதலில் விளையாடிய ஒருநாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் படுதோல்வியை சந்தித்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டி20ல் பாகிஸ்தான் அணி 31 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்க, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடந்த 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.
அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசிய நிலையில், இங்கிலாந்து 19.5 ஓவரில் 200 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் பட்லர் 59 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), மொயீன் அலி 36 ரன் (16 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), லிவிங்ஸ்டோன் 38 ரன் (39 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.