ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்

மும்பை : டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாற்று வீரராக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு, பல தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் கூறுகையில், “இந்த தொடரில் கில் தடுமாறி வருகிறார். ஐபிஎல் போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் மிக குறைந்த அளவில் இருக்கிறது. இந்த சூழலில் கில்லை எவ்வாறு தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. டெஸ்ட் போட்டியிலும் அவர் சரியாக விளையாடாத நிலையில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் இதேபோல் தான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கினர்.

தற்போது டி20 கிரிக்கெட்டிலும் இப்படி செய்கிறார்கள். இப்படி தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் அவர் 6000 ரன்கள் அடித்து விட்டால் பார்த்தீர்களா அடுத்த பெரிய கிரிக்கெட் வீரர் வந்துவிட்டார் என்று பாராட்டுவார்கள். எனக்கு தேர்வு குழுவின் நடவடிக்கையை பார்த்தால் எரிச்சலும் கோபமும் வருகிறது. ருதுராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த நிலையில் அவர் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை.
இதேபோன்று ரிங்கு சிங்கும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது ரிங்கு சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியாவுக்காக அனைத்தையும் கொடுத்த பிறகு அவரை நீக்குவது சரியா? இது நிச்சயமாக குப்பையான முடிவு. வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் தொடரில் எதற்கு நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை? யாரோ சிலரின் மனதை குஷிப்படுத்துவதற்காக இந்த தேர்வு நடந்திருக்கிறது. இதனால் ரிங்கு சிங்கை ஒரு பலியாடாக மாற்றிவிட்டார்கள்’’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

The post ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: