ராயல்ஸ் ராஜநடைக்கு தடை போடுமா சன்ரைசர்ஸ்?

ஐதராபாத்: ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்புத் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணியாக கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி உள்ளது. இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் மும்பை, நடப்பு சாம்பியன் சென்னை, பஞ்சாப், பெங்களூரு, டெல்லி அணிகளை வீழ்த்தி இருக்கிறது. கொல்கத்தா, குஜராத், பெங்களூர், சென்னை அணிகளிடம் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஐபிஎல் ரன் குவிப்பில் வரலாற்று சாதனைகளை படைத்தாலும், இடையில் சில ஆட்டங்களில் சொதப்புவதும் தொடர்கிறது.

இனி வென்றால்தான் பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதே சமயம், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை நெருங்கி விட்டது. இன்றைய ஆட்டத்தில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறும். அதற்கேற்ப புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான், 9 ஆட்டங்களில் 8 வெற்றிகளைக் குவித்து ராஜநடை போட்டு வருகிறது. அந்த உற்சாகத்துடன் இன்று ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இரு அணிகளும் 18 முறை மோதியுள்ளதில் 9-9 என சமநிலை வகிக்கின்றன.
* அதிகபட்சமாக ராஜஸ்தான் 220 ரன், ஐதராபாத் 217 ரன் விளாசி இருக்கின்றன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 127, ராஜஸ்தான் 102 ரன் எடுத்துள்ளன.
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ராஜஸ்தான் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

The post ராயல்ஸ் ராஜநடைக்கு தடை போடுமா சன்ரைசர்ஸ்? appeared first on Dinakaran.

Related Stories: