திம்மையன்பேட்டை ஊராட்சியில் சாலையில் தேங்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு: வடிக்கால்வாய் அமைக்காத அதிகாரிகள்

வாலாஜாபாத்: திம்மையன்பேட்டை ஊராட்சியில், வடிகால்வாய் இல்லாததால், மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் மெத்தன போக்கில் இருப்பதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் திம்மையன்பேட்டை ஊராட்சியில், 10க்கும் மேற்பட்ட தெருக்களில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஒன்றிய பள்ளி, அங்கன்வாடி மையம், இ சேவை மையம், நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள மேஸ்திரி தெருவில் லேசான மழை பெய்தாலே தெருக்கள் முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மழைநீர் வெளியேற வழியில்லாமல், பல நாட்களாக தேங்கி, அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுபற்றி, பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால், இப்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திம்மையன்பேட்டை ஊராட்சி மேஸ்திரி தெருவில் லேசான மழை பெய்தாலே தண்ணீர் குளம்போல் தேங்குகிறது. இதற்கு மழை நீர் வடிக்கால்வாய் இல்லை. தெருக்களை விட இப்பகுதி தாழ்வாக உள்ளது. இந்த தெருவை கடந்து செல்லும்போது முதியவர்கள், குழந்தைகள் என பலரும் சிரமப்படுகின்றனர்.

தெருவில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு நோய் தொற்று பரவும்  சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், மழைநீர் வடிக்கால்வாய் அமைக்கவும், தாழ்வான சாலையை மேம்படுத்துவதவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர் என குற்றஞ்சாட்டினர். எனவே, மாவட்ட நிர்வாகம், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்னையை கருத்தில் கொண்டு, மேற்கண்ட பகுதியில்  ஆய்வு நடத்தி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: