குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஈரோடு போலீசார் அதிரடி!: 'காக்கும் கரங்கள்'திட்டம் மூலம் மலை கிராமங்களில் நேரடி பரப்புரை..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் காக்கும் கரங்கள் என்ற அதிரடி திட்டத்தை காவல்துறையினர் தொடங்கியுள்ளார்கள். பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாகவும், கிராமப் பகுதிகளில் நேரடியாகவும் போலீசார் மேற்கொண்டு வரும் புதிய முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகமே வகுப்புகள் எடுக்கப்படும் நிலையில் குழந்தைகளுக்கு எதிரான இணையதள குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க ஆன்லைன் விழிப்புணர்வை தொடங்கியுள்ளனர் ஈரோடு போலீசார்.

இதன் ஒரு அங்கமாக 9 முதல் 12ம் வகுப்பு பயில்வோருக்கு பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த அறிவுரைகளும், சந்தேகங்களும் விளக்கமும் அளிக்கப்படுகிறது. அதில் ஸ்பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தளங்களில் எச்சரிக்கையாக இருப்பது குறித்து காவல் அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர். கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் இயங்காததால் ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்களும், சிறார் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் வசதி இல்லாத மலை கிராமங்களில் குழந்தை திருமணம், பாலியல் சீண்டல் போன்றவற்றை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 34 குழுக்களை காவல்துறை களமிறக்கியிருக்கிறது. இதனால் கடந்த 20 நாட்களில் மட்டும் 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதோடு பாலியல் புகாரில் 6 போக்சோ வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இதில் பெற்றோரை இழந்த குழந்தைகளும் அரவணைத்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு பேரிடரில் ஈரோடு போலீசாரின் இந்த அதிரடி பரப்புரை பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: