மேகதாது விவகாரத்தில் இரு மாநிலத்துக்கும் நியாயம் கிடைக்கும்: ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி

பெங்களூரு: ‘மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என ஒன்றிய நீர்ப்பாசன துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்துள்ளார். கர்நாடக மாநில அரசின் சார்பில் காவிரி நதியின் குறுக்கே மேகதாவில் 67 டிஎம்சி தண்ணீர் சேமித்து வைக்கும் திறன் கொண்ட அணை ரூ.9 ஆயிரம் கோடி செலவில் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய நீர்ப்பாசன அமைச்சகத்தின் சார்பில் கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தும் திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று காலை டெல்லியில் இருந்து ஒன்றிய நீர்ப்பாசன துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் பெங்களூரு விதானசவுதா வந்தார். இந்த ஆலோசனை கூட்டம் தொடங்குவதற்கு முன் ஒன்றிய அமைச்சரை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கஜேந்திர சிங் ஷெகாவத் நிருபர்களிடம் கூறியதாவது: பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கான மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது. மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு எந்த முடிவு எடுத்தாலும் அது அம்மாநிலத்திற்கு தொடர்பானதாகும். அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எப்படி வருகிறது என்பதை அறிந்த பிறகு இரண்டு மாநிலங்களின் நிலைமைக்கு தகுந்த மாதிரி ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

ஒன்றிய அரசு எந்த சூழ்நிலையில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்யும். இரு மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகா, தமிழ்நாடு இடையே மேகதாது அணை கட்டும் பிரச்னையில் ஒன்றிய அரசின் முடிவை நீர்ப்பாசனத்துறை உறுதியாக நிறைவேற்றும். கட்சியின் செயல்பாடுகள், அரசின் நிலைப்பாடுகள் வேறு வேறாகும். அதே நேரம் சட்டப்படி செய்ய வேண்டியதை நீர்ப்பாசனத்துறை சார்பில் அமல்படுத்தப்படும். தமிழக அரசின் கருத்தையும் கேட்டே முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

* தீர்மானம் பற்றி கவலையில்லை

கர்நாடக முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மட்டும் இன்றி வேறெந்த மாநிலம் தீர்மானம் நிறைவேற்றினாலும் அதைப்பற்றி எந்த கவலையும் கிடையாது. பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்கான மேகதாது அணை அமைக்கும் பணியை எந்த காரணத்தை முன்னிட்டும் கைவிடமாட்டோம்.  இவ்விஷயத்தில் ஒன்றிய அரசின் அனைத்து உதவியும் கர்நாடக மாநிலத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது. எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

Related Stories: