ஒலிம்பிக் பற்றி தெரிஞ்சுக்கலாமா?

இதோ வந்துவிட்டது அடுத்த ஒலிம்பிக் திருவிழா. 1896ல் தொடங்கி இதுவரை மொத்தம் 28 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. வரும் ஜூலை 23ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடக்கப்போவது 29வது ஒலிம்பிக். மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா பற்றி சில அடிப்படையான விஷயங்களை தெரிஞ்சுக்குவோமா?

ஒலிம்பிக் ரிங்

ஒலிம்பிக் கொடி 1914ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கிய கூபர்ட்டினால் அறிமுகப்படுத்தப்பட்டது. வெள்ளை நிற பின்னணியில் ஐந்து வளையங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு இருப்பதே ஒலிம்பிக் கொடி. மனிதர்கள் வாழும் ஐந்து கண்டங்களை பிரதிநிதித்துவப் படுத்தவே ஐந்து வளையங்கள். இதில் நீலம் ஐரோப்பாவையும், மஞ்சள் ஆசியாவையும், கருப்பு ஆப்பிரிக்காவையும், பச்சை ஆஸ்திரேலியாவையும், சிகப்பு அமெரிக்காவையும் குறிப்பதாக சொல்கிறார்கள்.

ஒலிம்பிக் ஜோதி

புராதன ஒலிம்பிக் நடந்த கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்படும் ஜோதி, ரிலே ரேஸ் முறையில் நகரங்களை நாடுகளை கடந்து ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்துக்கு கொண்டு வந்து பெரிய விளக்கில் ஏற்றப்படும். இம்முறை 1936ல் ஜெர்மனியின் பெர்லினில் ஒலிம்பிக் நடந்தபோது நடைமுறைக்கு வந்தது. ஒலிம்பிக் டார்ச்சை அந்தந்த நாட்டு விளையாட்டு வீரர்கள், தலைவர்கள், பிரபலங்கள், சாதாரண மக்கள் ரிலேரேஸாக ஏந்திவருவார்கள்.

ஒலிம்பிக் பதக்கங்கள்

போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் அணிவிக்கப்படும். தங்கம் என்றால் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப்பதக்கம்தான். நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு இடங்களை பெறும் வீரர்களுக்கு பட்டயங்கள் (சான்றிதழ்) வழங்கப்படுகிறது. பதக்கத்தில் வெற்றிக்கான கிரேக்கத்தின் பெண் கடவுள் நைக்கியின் படம் இடம்பெற்றிருக்கும்.

ஒலிம்பிக் கீதம்

ஒலிம்பிக் கொடி ஏற்றப்படும் போது ஒலிம்பிக் கீதம் இசைக்கப்படும். 1896ல் இருந்தே இந்த நடைமுறை இருக்கிறது. கோஸ்டிஸ் பலமாஸ் என்கிற கிரேக்க பாடலாசிரியர் எழுதிய வரிகளை ஸ்ப்ரிடோன் சமராஸ் என்கிற இசையமைப்பாளர் ஒலிம்பிக் கீதமாக மாற்றினார். ஆனால் இது அதிகாரப்பூர்வமான பாடலாக அறிவிக்கப்படாததால், ஒலிம்பிக் நடத்தும் நாடுகள் இஷ்டத்துக்கும் ஒலிம்பிக் கீதங்களை உருவாக்கி விட்டார்கள். 1960ல் ரோமில் ஒலிம்பிக் நடந்தபோதே சமராஸின் இசையில் அமைந்த கீதம்தான் இனி ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வமான கீதம் என்று அறிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக் சின்னம்

ஒலிம்பிக் போட்டிகளுக்கு சின்னமாக போட்டி நடைபெறும் நாட்டின் கலாச்சாரத்தை வெளிக்காட்டும் சின்னத்தினை (பெரும்பாலும் விலங்குகள்) அறிவிப்பதுண்டு. 1980ல் மாஸ்கோவில் ஒலிம்பிக் நடந்தபோது மிஷா என்கிற கரடியை அறிவித்ததிலிருந்து இந்த முறை பிரபலமானது (1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் நடந்தபோது அப்பு என்கிற யானையை நாம் இதுபோல சின்னமாக அறிவித்திருந்தோம்). இப்போதெல்லாம் ஒலிம்பிக் கொடியை காட்டிலும் இந்த சின்னங்களே மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஒலிம்பிக் சல்யூட்

ரோமானிய முறையில் ஒருவரை ஒருவர் வணங்கும் சல்யூட் முறையே ஒலிம்பிக் சல்யூட். தலைக்கு மேலாக வலது கையை தூக்கி விரல்களை இணைத்து, உள்ளங்கை வெளியே தெரிவது மாதிரியான சல்யூட். இடது கரம் அட்டென்ஷன் ஸ்டைலில் விரைப்பாக இடையை பிடித்தது மாதிரி இருக்கும். ஹிட்லர் இந்த சல்யூட்டில் மிகவும் கவரப்பட்டு, இதையே கொஞ்சம் மாற்றி (கையை மார்புக்கு நேராக நீட்டுவது மாதிரி) தன்னுடைய நாஜிப் படையினர் தனக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டிய முறையை உருவாக்கினாராம்.

Related Stories: