பராசக்தி திரைப்படமும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமும்

* இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்தி மொழி திணிப்புக்கு பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது?

இதற்கான விடை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்டது. இந்தியைக் காட்டிலும் தமிழ் தொன்மையான இலக்கிய வளம் மிக்க மொழி என்பது மட்டுமல்ல, மற்ற இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருத மொழியோடு நெருங்கிய தொடர்பு உடையவை. அவ்வளவு ஏன், மத்திய அரசு திணிக்க முற்படும் இந்தி மொழியும் சமஸ்கிருதமும் உருதுவும் சேர்ந்ததுதான். ஆனால், தமிழ் மொழி அப்படியல்ல. சமஸ்கிருத மொழியின் துணை இல்லாமல் தன்னைத் தானே நிறுவிக் கொண்ட சுயம்பு மொழி.

அதனாலதான் தமிழகத்தில், தமிழுக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான ஒருவிதமான பகை உணர்வு நீறுபூத்த நெருப்பாக நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. அதேநேரம் ஒரு மொழியாக இந்தி தமிழகத்தில் இருப்பது குறித்து எந்தக் காலத்திலும் தமிழர்கள் எதிர்த்ததில்லை. ஆனால், இந்தி மொழியே தமிழகத்திலும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என எந்த ஆட்சியாளர் வலியுறுத்தினாலும் தமிழர்கள் ஒன்று திரண்டு இதை எதிர்பார்பார்கள்.

இதுதான் மொழிப் போர் எனப்படும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் ஆணிவேர். உதாரணமாக தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தியை பரவலாக்கும் முயற்சிகள் 1918ல் துவங்கின. சென்னை மாகாணத்திலும் தென்னிந்தியாவில் இருந்த சமஸ்தானங்களான பங்கனப்பள்ளி, கொச்சின், ஹைதராபாத், மைசூர், புதுக்கோட்டை, சந்தூர், திருவாங்கூர் ஆகிய பகுதிகளிலும் இந்தியை பரப்பும் நோக்கத்தோடு சென்னை நகரத்தில் ‘தட்சிண பாரத இந்தி பிரசார சபா’ 1918ல் மகாத்மா காந்தியின் முயற்சியில் துவங்கப்பட்டது.

1927ல் இதன் தலைவரான மகாத்மா காந்தி, இறுதிவரை அந்தப் பதவியில் நீடித்தார். 1935வாக்கில் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஆறு லட்சம் மாணவர்கள் அங்கு இந்தி கற்றுக்கொண்டிருந்தனர் என்கிறது பேராசிரியர் அ. ராமசாமி எழுதிய Struggle for Freedom of Languages in India நூல். அந்தத் தருணத்தில் தென்மாநிலங்களில் மாணவர்கள் தாமாக முன்வந்து இவ்வளவு பரவலாக இந்தியை கற்றுக்கொள்வது பிரச்னையாகவில்லை என்பதை மனதில் கொள்வது நல்லது.

முதல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் 1939ல் கொழுந்துவிட்டு எரிந்தபோது கூட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘தட்சிண பாரத இந்தி பிரசார சபா’வில் இந்தி மொழியை கற்று வருபவர்கள் மீது எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. ஆக, திணிப்பைதான் காலம் காலமாக தமிழர்கள் எதிர்க்கிறார்கள். இதே எதிர்ப்பைதான் 1947லும் மேற்கொண்டார்கள். இரண்டாம்கட்ட இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் மையமும் மத்திய அரசு மேற்கொண்ட இந்தி மொழி திணிப்புதான்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, மத்திய மற்றும் மாகண சட்டமன்றங்களுக்கு 1946ல் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றது. சென்னை மாகாண முதல்வராக பதவியேற்ற டி.பிரகாசம், ஓர் ஆண்டிற்குள்ளேயே பதவி விலகினார். இதற்கடுத்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் 1948ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி பள்ளிகளில் இந்தி கற்பிப்பது குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டது மாகாண அரசு. ஆனால், இந்த முறை, தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்பை மனதில் கொண்டு ஓர் ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, சென்னை மாகாணத்தில் இருந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் பகுதிகளில் இந்தி கட்டாயப் பாடமாகவும், தமிழகப் பகுதிகளில் விருப்பப் பாடமாகவும் இந்தி அறிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் தேசிய அளவிலான ஊடகங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

அனைவருக்கும் கட்டாயமாக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். எனவே தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கின. இந்த முறை போராட்டத்தின் தலைமை நிர்வாகியாக பேரறிஞர் அண்ணா நியமிக்கப்பட்டார். தந்தை பெரியாரை அழைத்து, முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பேசினார். ஆனால், அதில் பயன் ஏதும் ஏற்படவில்லை. ஆகஸ்ட் 10ம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்கியது.

பெரியார், அண்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி சென்னைக்கு வந்தபோது அவருக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. முதல்வர் ஓமந்தூரார், கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் ஆகியோருக்கும் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. 1948 செப்டம்பர் 14ம் தேதி ஹைதராபாத் மீது இந்திய அரசு போலீஸ் நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து சென்னை மாகாணத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

பிறகு, அக்டோபரில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் தொடர முடிவுசெய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு, இது தொடர்பான போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பலர் கைதுசெய்யப்பட்டனர். இருந்தாலும் இந்தி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை முற்றுகையிடுவது நீடித்துவந்தது. இச்சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜர் ஒரு கருத்தை வெளியிட்டார்.

‘‘பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து’’ என்றார் அவர்.
இந்நிலையில், 1949ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓமந்தூரார் பதவி விலகினார். இதையடுத்து, பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருந்தது விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டமும் முடிவுக்கு வந்தது. ஓமந்தூராருக்குப் பிறகு பி.எஸ்.குமாரசாமி ராஜா முதல்வரானார். அவரது அமைச்சரவையில் மாதவ மேனன் கல்வி அமைச்சராகப் பதவியேற்றார்.

1950 மே 2ம் தேதி, பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த முறையும் அண்ணா இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மிகப் பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தப்போவதாகவும் அறிவித்தார். இதற்கிடையில் 1949ம் ஆண்டு பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவை நிறுவினார் அண்ணா. எனினும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில், திமுகவும், திராவிடர் கழகமும் இணைந்தே பயணித்தன.

1952ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் இந்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்தி எழுத்துக்களை தார்ப்பூசி அழிக்கும் போராட்டத்தில் திமுகவும், திராவிடர் கழகழும் இணைந்து களம் கண்டன. பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் மாநிலம் முழுவதும் நடந்த போராட்டங்களின் போது பெரும்பாலான ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன.

இந்தி இந்தியாவின் அலுவல் மொழி அல்லது ஆட்சி மொழி என்கிற அரசியல் சட்ட ஏற்பாடு 1950ல் வந்தது. அதனை எதிர்த்து 1952, 1953, 1954 ஆண்டுகளில் தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன. ஒரு கட்டத்தில் “இந்தியை ஒழிக்க, இந்திய தேசியக் கொடியை எரிப்பேன்!” எனப் புறப்பட்டார் பெரியார். உடனே “தேசியக் கொடியையே கொளுத்துவதா?” எனத் தேசியத் தலைவர்கள் உரத்துக் கூவினர். தி.மு.க. தலைவர் அண்ணா கூட இந்தப் போராட்ட முறை தேவையில்லை என்றார்.

1955, ஆகஸ்ட் முதல் தேதி இந்திய தேசிய கொடியை கொளுத்தும் போராட்டம். இதற்கு முன்பாக பிரதமர் நேருவின் ஆலோசனைப்படி பெரியாரை சந்தித்தார் காமராஜர். “இந்தி கட்டாயப் பாடம் என்பதை நீக்குவதாக’’ உறுதி தந்தார். இதனையடுத்து கொடி கொளுத்தும் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இப்படி எதிர்ப்பு பரவலாகத் தொடங்கியதால் காங்கிரஸ் அரசு இந்தித் திணிப்பு முடிவிலிருந்து பின்வாங்கியது.

பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கும் உத்தரவை ஜூலை 27ம் தேதி திரும்பப் பெற்றுக்கொண்டது. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்குவதற்கு நடந்த முயற்சிகள் இதோடு முடிவுக்கு வந்தன. இதற்குப் பிறகு ஆட்சி மொழியாக இந்தியை இந்திய அரசு முன்வைத்தபோது, மீண்டும் ‘இந்தி திணிப்புக்கு எதிரான’ போராட்டம் வெடித்தது. அரசமைப்புச் சட்டத்தை மையமாக வைத்து இந்தப் போராட்டங்கள் வெடித்தன.

இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஆங்கில வடிவத்தை அதிகாரப்பூர்வமான அரசியலமைப்பு சட்டமாக வைக்காமல், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை அதிகாரபூர்வமான அரசமைப்புச் சட்டமாக்க முயற்சிகள் நடந்தன. இந்த விவரங்களை கிரான்வில் ஆஸ்டின் எழுதிய ‘The Indian Constitution: Corner Stone of a Nation’ என்ற நூல் விவரிக்கிறது.

அந்த நூலில் உள்ள தகவல்களின்படி, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை இந்தியில் மொழிபெயர்த்து, அதனையே அடிப்படையான அரசமைப்புச் சட்டமாக வைத்துக்கொள்ளும் திட்டத்தை முன்மொழிந்தார் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத். 1948ம் ஆண்டு கோடை காலத்தில் இந்தி மொழிபெயர்ப்பு நேருவிடம் அளிக்கப்பட்டது. ‘‘இதிலிருக்கும் ஒரு வார்த்தையும் எனக்குப் புரியவில்லை’’ என ராஜேந்திர பிரசாத்துக்கு கடிதம் எழுதினார் நேரு.

முழுக்க முழுக்க சமஸ்கிருதமயமாக்கியதால்தான் அது யாருக்கும் புரியவில்லை என இந்தி ஆதரவாளர்கள் பிறகு குற்றம்சாட்டினார்கள். இருந்தாலும் இந்தி அரசமைப்புச் சட்டத்தை அதிகாரபூர்வமாக்கும் முயற்சிகள் தொடரவே செய்தன. ஒரு கட்டத்தில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ‘‘தென்னிந்தியாவில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு இது உதவிகரமாக மாறிவிடும்’’ என்றார். விரைவிலேயே இந்த விவகாரம் ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் இடையிலான போட்டியாகவே மாறியது.

ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டமும் பிறகு இந்தியில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமானதாக இருக்கலாம் என்று ஒரு யோசனையை முன்வைத்தார் ராஜேந்திர பிரசாத். ஆனால், இது ஏற்கப்படவில்லை. ஆங்கில வடிவமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு நடுவில் இந்தியாவின் தேசிய மொழி எது என்பது குறித்த பிரச்னை அரசமைப்பு அவையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் அந்நிய மொழியான ஆங்கிலத்தை முற்றாக தவிர்த்துவிட்டு, அனைத்து இந்தியர்களையும் ஒருங்கிணைக்கும் மண்ணின் மொழியாகிய இந்தியை அலுவல் மொழியாக்க வேண்டும் என அனைத்து தேசிய தலைவர்களும் விரும்பினார்கள். காந்தி, நேரு, பட்டேல், ராஜாஜி, அம்பேத்கர் என அனைவருக்கும் இதில் ஒரு மித்த கருத்து இருந்தது.

அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் இந்தியை தேசிய மொழியாக்க பரிந்துரை செய்ததோடு, மொழி வழி மாகாண பிரிவினை எதிர்காலத்தில் மொழியை அரசியல்வாதிகள் ஓர் ஆயுதமாக பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்றார். அம்பேத்கரின் நோக்கம் தொலைநோக்கு உடையதுதான். எதிர்கால இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் நேரக் கூடாது என்பதற்காகதான் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்தார்.

ஆனால், அந்தந்த மாநில மொழிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் எங்கும் சொல்லவில்லை.
இன்னொரு முக்கியமான விஷயம், ஆங்கிலம் முற்றாக வேண்டாம் இந்தி மட்டுமே போதுமானது என்பதை ராஜாஜி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்றவர்கள் ஏற்கவில்லை. கவனிக்க, இந்தி தெரியாத, ஆனால், முதல் இந்தி திணிப்புக்கு 1939ல் வித்திட்ட ராஜாஜி, 1947-48ல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருப்பது போதுமானது என்ற கருத்தை ஏற்கவில்லை. ராஜாஜி ஆங்கிலமும் தேவை என்ற கருத்தை முன்வைத்தார்.

இதையடுத்து முன்ஷி அய்யங்காரிடம் இந்த விஷயத்தில் ஆய்வு செய்து பரிந்துரைகள் தரும்படி கேட்கப்பட்டது. அவர் தந்த பரிந்துரைப்படி, இன்னும் 15 ஆண்டுகள் இந்தி பேசாத மாநிலங்கள் தயாராகும் வரை ஆங்கிலமும் இணைப்பு மொழியாக தொடரலாம் என்றும் அதற்கு பிறகு இந்தி மொழி மட்டுமே அலுவல் மொழியாகக் கொள்ளலாம் எனவும் முடிவானது. இந்த முடிவுதான் வரலாற்றில் அழுத்தமாக பதிந்துவிட்ட மூன்றாம் கட்ட இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு 1965ம் ஆண்டு வித்திட்டது.

* பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் மாநிலம் முழுவதும் நடந்த போராட்டங்களின் போது பெரும்பாலான ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன.

Related Stories: