தேர்தல் கமிஷன் போட்ட குண்டு: எஸ்ஐஆர் சரியா? நிஜத்தன்மை என்ன? வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

* எஸ்ஐஆர்…
நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தப்பணியின் எளிய பெயர் தான் எஸ்ஐஆர். இன்று நாட்டின் அரசியலில் புதிய அனலை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பும் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா என்றால்.. ஆம். அப்போது எல்லாம் எந்தவித பதற்றமும், பரபரப்பும் இருந்தது இல்லை. ஆனால் இன்று?… தேர்தல் கமிஷன் கமிஷன் கொடுத்த படிவமும், அதில் கேட்ட பல்வேறு கேள்விகளும் தான் இந்த பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு எஸ்ஐஆர் பணிகள் திடீரென தொடங்கப்பட்டு அங்கு 7.89 கோடியிலிருந்து 68.5 லட்சம் பெயர்களை நீக்கியது தேர்தல் ஆணையம்.

இது மொத்தம் உள்ள வாக்காளர் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். அதன்பின் வாக்காளர்கள் விண்ணப்பம் கொடுத்து சேர்ந்ததன் அடிப்படையில் தற்போது பீகார் மாநிலத்தில் 7,45,26,858 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
அதே பணியை தமிழ்நாடு, உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, சட்டீஸ்கர், கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவுகளில் மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம். இதில் முதற்கட்டமாக மேற்குவங்கம், ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவு பெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த 3 மாநிலங்களில் மட்டும் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். அதை தொடர்ந்து தமிழ்நாடு, குஜராத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 97 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் குஜராத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை முந்தைய 5.08 கோடியிலிருந்து 4.34 கோடியாகக் குறைந்துள்ளது. சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கு முன்பு, குஜராத்தில் மொத்தம் 5,08,43,436 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, இந்த எண்ணிக்கை 4,34,70,109 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 27ம் தேதியில் மொத்தமாக வாக்காளர்கள் எண்ணிக்கை 6,41,14,587 இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர்கள் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளனர். இதில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15.18 சதவீதம் ஆகும். எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு இறந்தவர்களின் எண்ணிக்கை 26,94,672, இடம்பெயர்ந்தவர்கள் 66,44,818, இரட்டை வாக்குகள் 3,39,278 என கண்டறியப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,25,018 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 24,368 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவம் கொடுத்த 6.41 கோடி பேர் பட்டியல் வரைவு பட்டியலில் இடம் பிடித்து விட்டது. அப்படியானால் படிவம் கொடுக்காதவர்கள் நிலை என்ன?. அப்படி பார்க்கும் போது இந்த எஸ்ஐஆர் பணி நம்பகத்தன்மை வாய்ந்ததா?. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், யாருமே எளிதாக நிரப்ப முடியாத விண்ணப்பத்தை கொடுத்து, அதில் ‘அவுட் ஆப் சிலபஸ்’ கேள்விகளை கேட்டு வாக்காளர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றுவதுதான் தேர்தல் ஆணையத்தின் நோக்கமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே தமிழ்நாட்டில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை நிச்சயம் சரிபார்க்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த எஸ்ஐஆர் பணி பீகாரையும், மேற்குவங்கத்தையும் குறிவைத்து என்று கொண்டு வரப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. ஆனால் பீகாரில் 68 லட்சம் வாக்காளர்களும், மேற்குவங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 97 லட்சம் என்பதும், அதில் 66 லட்சம் பேர் இடம் பெயர்ந்தவர்கள் என்று தேர்தல் ஆணையம் கூறுவதும் அதிர்ச்சி அளிக்கிறது.

எஸ்ஐஆர் என்பது தமிழ்நாட்டை குறிவைத்து கொண்டு வரப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே 18 வயது நிரம்பியவர்கள் மட்டும் அல்லாமல் அந்தந்த அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் அனைவரும் வரும் ஜன. 18 வரை வாக்காளர் பட்டியலில் தங்கள் பூத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். அது தான் இப்போது அவசியம். இல்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் தங்கள் உரிமையை இழக்கும் நிலை ஏற்படும். அதோடு வரும் தேர்தல்களில் ஓட்டு போட முடியாத நிலை ஏற்படும். எனவே பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்வது அனைவரின் கடமை.

* 3.17 கோடி வாக்காளர்கள் இதுவரை நீக்கம்
நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.17 கோடி வாக்காளர்கள் இதுவரை நீக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம்/
யூனியன் மொத்த
வாக்காளர்கள் நீக்கப்பட்
டவர்கள்
1. பீகார் 7,89,69,844 44,42,986
2. மேற்குவங்கம் 7,66,37,529 58,20,898
3. ராஜஸ்தான் 5,46,56,215 41,79,819
4. கோவா 11,85,034 1,00,042
5. புதுச்சேரி 10,21,578 1,03,467
6. லட்சத்தீவு 57,813 1429
7. தமிழ்நாடு 6,41,14,587 97,37,832
8. குஜராத் 5,08,43,436 73,73,327

* எஸ்ஐஆர் எப்போது எல்லாம் நடந்தது?
1952 மற்றும் 2004க்கு இடைப்பட்ட காலத்தில் எஸ்.ஐ.ஆர். பலமுறை நடந்துள்ளது. ஒவ்வொரு பிரதமர் ஆட்சி காலத்திலும் எஸ்ஐஆர் எத்தனை முறை நடந்தது என்பது தொடர்பான பட்டியல்.
1. நேரு (முதல் திருத்தம்) 1952, 1957, 1961
2. லால் பகதூர் சாஸ்திரி 1965
3. இந்திரா காந்தி 1983
4. ராஜீவ் காந்தி 1987, 1989
5. பி.வி. நரசிம்ம ராவ் 1992
6. வாஜ்பாய் 2002
7. மன்மோகன்சிங் 2004
8. மோடி 2025

* 45% பேர் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள்
தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட 97 லட்சம் பேரில் 45 சதவீதம் பேர் நகர்புறத்தை சேர்ந்தவர்கள். குறிப்பாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை பகுதிகளில் வாக்காளர்கள் நீக்கம் அதிகம் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 நகர்ப்புற மாவட்டங்களில் 37 தொகுதிகள் உள்ளன.

* பெயர் இல்லாதவர்கள் பதற்றப்பட தேவையில்லை
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பதற்றப்பட தேவை இல்லை. அவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். ஜன.18 வரை அதற்கு தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது. ஆனால் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். புதிய வாக்காளர் விண்ணப்பத்திற்கான படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டுபிடிப்பது எப்படி?
தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை பொதுமக்கள் அனைவரும் செல்போன்களில் எளிதாக சரிபார்க்கலாம்.
* voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தினுள் செல்ல வேண்டும்.
* வாக்காளர் அடையாள அட்டை எண்(EPIC) உள்ளீடு செய்ய வேண்டும். வாக்காளர் பெயர், அவரின் வயது மற்றும் எந்த தொகுதி என்ற விவரங்களையும் உள்ளீடு செய்து கண்டுபிடிக்கலாம்.

* எஸ்ஐஆர் படிவம் கிடைத்தும் சமர்ப்பிக்காதவர்கள் என்ன செய்யலாம்?
குறித்த காலக்கெடுவிற்குள் கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்காதவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு தங்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ புதிதாக சமர்ப்பித்து தங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

* ஓட்டு போடும் பூத்கள் மாற்றம்
வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. புதிதாக 6 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படுகின்றன. அதனால், இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் ஓட்டு போடும் வாக்குச்சாவடிகளும் மாற்றப்பட்டுள்ளன. அதனால் வாக்காளர்கள் அதை கவனமாக பார்க்க வேண்டும். உங்கள் எபிக் எண்ணை (EPIC) இணையதளத்தில் உள்ளிட்டு நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

* பீகாரில் திடீரென கூடிய வாக்குகள்
பீகாரில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது மொத்தம் இருந்த 7.89 கோடி வாக்காளர்களில் 68.5 லட்சம் பேர் நீக்கப்பட்டு 7.21 கோடி வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். அதன் பின் பெயர்கள் சேர்க்க அவகாசம் கொடுக்கப்பட்ட போது 24 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இறுதியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை தேர்தல் ஆணைய கணக்குப்படி 44,42,986ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: