மருந்து, சோப்பு, பேஸ்ட், எண்ணெய், புத்தகம், உதிரி பாகம், துணிகள்; எங்கும் போலி எதிலும் போலி: பாத்ரூம், கிச்சன் வரை டுபாக்கூர்ஸ்

 

* கள்ள நோட்டுகளுக்கும் பஞ்சமில்லை

குற்றங்களின் பிறப்பிடமாக, தலைநகரமாக டெல்லி மாறிக் கொண்டிருக்கிறது. மோசடிகள் செய்வதிலும் புதுப்புது டெக்னிக் புகுத்தப்பட்டு வருகிறது. கொலை, கொள்ளை, போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை, சைபர் குற்றங்கள் என பெருகிக் கொண்டிருக்கின்றன. இதனுடன், நாட்டின் பொருளாதாரத்துக்கே பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கள்ள நோட்டு புழக்க மோசடியும் சேர்ந்திருக்கிறது. டெல்லியில் சமீப காலமாக, கள்ள நோட்டை அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பல்கள் அல்லது வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுகளை கடத்தி வந்து, டெல்லியில் புழக்கத்தில் விடும் போக்கும் அதிகமாக காணப்படுகிறது. சமீபத்தில் கூட, சிறுவர்கள் விளையாடுவதற்கான போலி ரூபாய் நோட்டுகளில் இருக்கும் இழைகளை பயன்படுத்தி, கள்ள நோட்டுகளை தயாரித்த கும்பலை போலீசார் சமீபத்தில் பிடித்தனர்.

அந்த நோட்டுகள், அசல் நோட்டுகளை போலவே இருந்தது. சாதாரண மக்களால் இந்த வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியவே முடியாது. அந்தளவுக்கு ‘தொழில் சுத்தம்.’ இதைத் தொடர்ந்து, கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளை காவல் துறை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்காக பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் கிடைத்த தகவல்களை கண்டு, காவல் துறையே மிரண்டு போயிருக்கிறது. அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழக்கையில் கள்ள நோட்டுகளின் ஆதிக்கம் உள்ளது. மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கக் கூடிய நோட்டுகளில் கண்டிப்பாக ஒன்றிரண்டு நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருக்க வாய்ப்புள்ளது. கள்ளநோட்டுகளை அச்சடிப்பதும், புழக்கத்தில் விடுவதும் பெரிய குற்றம். இதன் பின்னணியில் பெரிய கும்பல்கள் சர்வதேச அளவில் செயல்படுகின்றன.

இதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் காவல் துறையினர். இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கள்ள நோட்டு புழக்கத்தை தடுப்பதற்காக கடந்த சில மாதங்களாக போலீஸ் நடத்தி சோதனைகளில் அதிர்ச்சி தரும் பல உண்மைகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகளுடன் இந்த கள்ளநோட்டு புழக்கம் நின்று விடவில்லை. மக்கள் அன்றாடம் தங்களின் பாத்ரூம், கிச்சன்களில் பயன்படுத்தும் பொருட்கள் வரை ஊடுருவி உள்ளது. உள்ளூரில் தயாரிக்கப்படும் நெய், துணி துவைப்பதற்கான சோப்புகள், பவுடர்கள், வாகனங்களுக்கான இன்ஜின் ஆயில், ஷாம்பூ, கடுகை, உப்பு, உடைகள் என எல்லாவற்றின் விற்பனையிலும் கள்ள நோட்டு புகுந்துள்ளது. அதோடு, பள்ளி புத்தகங்களை போலியாக அச்சிட்டு புழக்கத்தில் விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் பொருளாதாரத்தில் கள்ள நோட்டு புழக்கம் வேகமாகவும், பரந்து விரிந்தும் பரவியுள்ளது. ஒவ்வொரு வீட்டின் அன்றாட வாழ்க்கையில் அது அங்கமாகி இருக்கிறது. கள்ள நோட்டுகளை அச்சடிப்பது, புழக்கத்தில் விடுவது பெரிய குற்றம். அதன் பின்னணியில் இருப்பர்களை கண்டுபிடித்து கைது செய்வதில், காவல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, மார்க்கெட்டுகள், பொருட்கள் விற்பனை, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு முதல் இதுவரையில் டெல்லியில் கள்ள நோட்டுகள் தொடர்பாக 740 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், போலி பொருட்களை தயாரிப்பது, விற்பனை செய்வது ஆகியவையும் அடங்கும். இந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலா காலக்கட்டத்தில் காப்புரிமை சட்டத்தின் கீழ் 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கள்ள நோட்டுகள் மட்டுமின்றி நெய், எண்ணெய் உட்பட உணவு பொருட்களிலும் போலிகள் வந்து விட்டன. இது, மக்களின் சுகாதாரத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன. அவர்களின் உடல்நல பாதுகாப்புக்கு சமீப காலமாக பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அலிப்பூரில் சமீபத்தில் ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 1,500 போலி நெய் பறிமுதல் செய்யப்பட்டது. புகழ் பெற்ற நிறுவனங்களின் பெயரில் இந்த நெய்கள் அடைக்கப்பட்டு, அந்த நிறுவனங்களின் லேபிளும் விற்கப்பட்டு வந்தன. அதுவும் இன்று நேற்றல்ல. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறைகேட்டில் இது ஈடுபட்டு வந்துள்ளது. சமையல் எண்ணெய்யையும், தரம் குறைந்த செயற்கை மாவு பொருட்களையும், பசைகளையும் பயன்படுத்தி இந்த போலி நெய் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தினால் கடுமையான செரிமாண பாதிப்புகளை மட்டுமின்றி, உடல் நலத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த தொழிற்சாலையில் போலி நெய் தயாரிப்பதற்காக இருப்பில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்ற ஒரு போலி தொழிற்சாலை, பாவனா தொழிற்சாலை பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை விட பெரிதாக ஒரு காரியத்தையும் போலீசார் செய்துள்ளனர். இதுதான், அவர்களை திகைப்பில் ஆழ்த்தி விட்டது. அஜீரண கோளாறுகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜீரண மருந்துகள், சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது. இதை வாங்கி குடிப்பர்கள் அதிகம். இதையே போலியாக தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை கண்டுபிடித்த போலீசார், அங்கிருந்த ஒரு லட்சம் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். அதோடு, இதை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த மூலப் பொருட்கள், இயந்திரங்கள், இந்த மருத்தை பாக்கெட் செய்வதற்கான பேக்கேஜ் இயந்திரம் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இந்த மருந்தும் தற்போது விற்பனையில் உள்ள பிரபல நிறுவனங்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு நடத்தப்பட்ட சோதனையில் மருந்துகளை போலியாக தயாரிக்கும் தொழிற்சாலையை பிடித்தனர். இங்கு பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள், வலி நிவாரணிகள், உடல் உற்சாக மருந்துகள், காயங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயின்மென்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும், டெல்லி மட்டுமின்றி அதன் அண்டை மாநிலங்களிலும் மருந்து கடைகள் மூலமாக விற்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் இதே போன்ற பல போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகளை போலீசார் கண்டுபிடித்து சீல் வைத்துள்ளனர். இந்த கள்ளச்சந்தையானது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட், ஷாம்பூ, துணி துவைக்க பயன்படுத்தப்படும் போலி சோப்புகள், திரவங்கள், தரைகளை சுத்தம் செய்யும் ரசாயன திரவங்கள் போன்றவற்றையும் பிரபல நிறுவனங்களின் பெயர்களில் தயாரித்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

வடகிழக்கு டெல்லியில் நடத்தப்பட்ட சோதனையில் 18 ஆயிரம் போலி டூத்பேஸ்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதோடு, பேஸ்ட்டுகளை அடைப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான டியூப்புகளையும் பறிமுதல் செய்தனர். இந்த டூத்பேஸ்ட்டுகளை தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் ஏராளமான டின்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. இது மட்டுமல்ல, பிரபல நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜீன்ஸ் பேன்ட்டுகள், வாட்டர் பாட்டில்களும் போலியாக மார்க்கெட்டில் சுற்றி வருகின்றன. இது மட்டுமா? வாகன உதிரி பாகங்களும் போலியாக தயாரித்து விற்பதில் டெல்லி மோசடிகாரர்கள் கரை கண்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் முதல் ஆடம்பர கார்கள் வரையில், அனைத்துக்கும் போலி உதிரி பாகங்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. இதுபோன்ற ஒரு தொழிற்சாலையையும் டெல்லி குற்றப் பிரிவு போலீசார் கண்டுபிடித்து, சீல் வைத்துள்ளனர். இதில், ஒரு லட்சம் போலி உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரேக் பேடுகள், கிளட்ச் பிளேட்டுகள், ஸ்பார்க் பிளக்குகள், பியரிங்கஸ், இன்ஜின் ஆயில்கள் போன்றவை இவற்றில் அடங்கும்.

மோசமான தரத்தில் தயாரிக்கப்படும் இவை, மக்களின் உயிரோடு விளையாடக் கூடியவை. அலிப்பூரில் நடத்தப்பட்ட ஒரு சோதனையில் இன்ஜின் ஆயிலை போலியாக தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான ஆயில் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரி பாட புத்தகங்களும் கள்ளச்சந்தை மோசடியில் இருந்து தப்பவில்லை. சமீபத்தில் என்சிஆர்டிசி பாடத் திட்டத்தை சேர்ந்த 1.7 லட்சம் போலி புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும். மிகவும் தரம் குறைந்த காகிதம், இங்க்கை பயன்படுத்தி இந்த புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தன.

நம்பகமான கடையில் வாங்குங்கள்
கள்ளச்சந்தை பற்றி போலீசார் கூறுகையில், ‘மக்கள் எந்த பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் , அவற்றை நம்பிக்கைக்குரிய கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். போலி பொருளாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால், அது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், அந்த பொருளால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க இயலும்,’ என்று தெரிவித்தனர்.

Related Stories: