சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறும் ஜென் இசட்? ஏஐ காட்சிகளால் ஏமாற்றம்; தனியுரிமை போவதால் வெறுப்பு; போஸ்டிங் ஜீரோ

கார், பைக்கில் அமர்ந்தபடி ஒரு கிளிக், டூர் போட்டோ, பணி அல்லது படிப்பில் சாதனைகள் என தங்கள் அன்றாட வாழ்க்கையை பேஸ்புக், இன்ஸ்டாவில் போடாதவர்கள் இருக்க முடியாது. குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒன்றிரண்டு போஸ்டாவது வந்து விடும். சமூக வலைதள மோகம் தீவிரமானதில் இருந்து பலருக்கு இதுதான் உலகம். ரீல்ஸ் போஸ்ட் செய்தபடி இருப்பார்கள். எவ்வளவு லைக்ஸ், கமென்ஸ் வந்துள்ளது என பார்ப்பதுதான் அவர்களின் அலாதி. ஆனால் இன்று, தொழில்நுட்பத்துடனேயே பிறந்த ஒரு தலைமுறை, சமூக வலைதளங்களை பார்ப்பதையோ, அதில் பதிவிடுவதையோ முற்றிலும் நிறுத்தி விட்டார்கள். இதை ‘போஸ்டிங் ஜீரோ’ என்கிறார்கள். ஜென் இசட் தலைமுறைதான் இப்போது ‘போஸ்டிங் ஜீரோ’வை கையில் எடுத்திருக்கிறது. 1997 மற்றும் 2012ம் ஆண்டுகளுக்கு இடையே பிறந்தவர்கள் தான் ஜென் இசட் என அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் காலத்தில் தான் கம்ப்யூட்டர், மொபைல் போன் என நவீன கண்டுபிடிப்புகளின் பயன்பாடு பரவலாகத் தொடங்கியது. இவர்களுக்கு முந்தைய தலைமுறையினர் இன்னும் சமூக வலைதளங்களிலும், யூடியூப், இன்ஸ்டா ரீல்ஸ்களை மொபைலில் பார்த்தபடி பொழுது போக்கிக் கொண்டிருக்க, இப்படிப்பட்ட ‘டெக்’ குழந்தைகள், சமூக வலை தளங்களை பார்ப்பதோ, பதிவிடுவதோ இல்லை. அந்த மாய உலகில் இருந்து முற்றிலுமாக வெளியேறி வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பதைத்தான் இன்று அறிஞர்கள் பலரும் ஆய்வுக்கு உட்படுத்திவருகின்றனர்.

இது, சமூக வலைதளங்களை முற்றிலுமாக புறக்கணிப்பதோ அல்லது விடுபடுவதோ அல்ல. விலகி நிற்பது. இவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பார்கள். பெயருக்கு புரொபைல் இருக்கும், அவ்வளவு தான். ஆனால், எதையும் பதிவிட மாட்டார்கள்; ஷேர் செய்ய மாட்டார்கள். புதிய வேலை, புதிய பைக், கார் என அன்றாட வாழ்வின் மகிழ்ச்சிக்குரிய தருணங்களைக் கூட சமூக வலைதளங்களில் பகிர மாட்டார்கள். இதுதான் ஜென் இசட் காரர்களின் டிரெண்டாக மாறி விட்டது. சமீபத்திய சர்வேயின்படி, சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருந்த இந்த தலைமுறையினரின் எண்ணிக்கை, 2022ம் ஆண்டில் இருந்து இதுவரை 10 சதவீதம் குறைந்து விட்டது என தெரிய வந்துள்ளது. இந்தசர்வே, 50 நாடுகளில் 2.5 லட்சம் பேரிடம் எடுக்கப்பட்டுள்ளது.

கற்க வாய்ப்பில்லை: இதில் பெரும்பாலானோர், புதிதாக கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளனர். ‘‘பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப்களில் உள்ள வீடியோக்கள், பதிவுகளை நேரம் போவது தெரியாமல் அடுத்தடுத்து தள்ளிக் கொண்டே பார்ப்பதால் என்ன கிடைத்து விடப்போகிறது. எல்லாமே குப்பை தான். புதிதாக கற்க எதுவுமில்லை. வாழ்க்கையை முன்னேற்றுவதற்கோ, உத்வேகம் அளிப்பதற்கோ அதில் ஒன்றும் இல்லை’’ என்று ஒருவர் கூறியிருக்கிறார்.

ஏஐ பொய்கள்: மற்றொருவர், ‘‘எத நம்புறதுன்னே தெரியல…’’ என அங்கலாய்த்திருக்கிறார். காரணம், ஏஐ-தான். எது பொய், எது உண்மை என்றே தெரியாத அளவுக்கு ஏஐ வீடியோக்கள், படங்கள் பரவிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லையையே தாண்டாத ஒருவர், வெளிநாட்டில் ஒரு கற்பனை கேரக்டருடன் காபி அருந்திக் கொண்டிருக்கிறார். மற்றொருவர், எலான் மஸ்குடனும், புடினுடனும் ஹாயாக வாக்கிங் செல்கிறார். இப்படி நம்பவே முடியாத பொய்ப் படைப்புகள் விரவிக் கிடக்கின்றன. போலி என்றே தெரியாத அளவுக்கு படு கச்சிதமாக இந்த காட்சியை உருவாக்கிக் கொடுத்து விடுகிறது ஏஐ. இந்த பொய் ஜாலங்களை நம்ப ஜென் இசட் தலைமுறை தயாராக இல்லை என்பது கணக்கெடுப்பில் உறுதியாகியிருக்கிறது.

தனியுரிமை: மற்றொரு முக்கியக் காரணமாக, தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களாக இந்தத் தலைமுறையினர் உள்ளனர். வாட்ஸ் ஆப் குழு பதிவுகள், உரையாடல்கள் போல் அல்லாமல், சமூக வலைத்தளம் திறந்த வெளியாக உள்ளது. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இதனை இவர்கள் விரும்புவதில்லை. சிலர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாவிட்டாலும், வாட்ஸ் அப் குழு போல, சமூக வலைதளத்தில் நண்பர்களுடன் உரையாடுவதற்கென்றே ரகசிய கணக்கு துவங்கியுள்ளனர் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.

விளம்பரத்தால் எரிச்சல்: மேலும் சமூக வதைளங்களில் விளம்பரங்கள் அவ்வப்போது தோன்றி எரிச்சலூட்டுவதாக இவர்கள் கூறுகின்றனர். சமூக வலைதளங்கள் சந்தைக்கடை போல மாறிவிட்டது என்கிறார் ஒரு ஜென் இசட் இளைஞர். ஒருவர் தான் போஸ்ட் செய்வதை எல்லாரும் பார்க்க வேண்டும் என நினைக்கிறார். இதற்காக எதையெல்லாமோ செய்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதால் இந்த தொல்லைகள் இல்லை. மேலும், வீடியோக்களையும், பதிவுகளையும் தொடர்ந்து ஸ்கிரோல் செய்து பார்த்துக் கொண்டிருந்தால், முடிவே இல்லாமல் நேரம் வீணாகக் கழிகிறது. இதனால் எந்தப் பயனும் இல்லை. போதாக்குறைக்கு தேவையற்ற விளம்பரங்கள் கவனத்தையும், நோக்கத்தையும் சிதறடித்து விடுகின்றன என தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் பொய்கள் புரையோடிப்போன சமூக வலைதளங்களை வெறுக்கின்றனர் இந்த தலைமுறையினர். மாறாக பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாவுக்கு மாறாக, விளம்பரத் தொல்லை இல்லாத, தனியுரிமை பாதிக்காத வகையில் வாட்ஸ்ஆப்,டிஸ்கார்ட் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, ‘‘ஜென் இசட் இளைஞர்கள் ராணுவத்தில் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி,’’ எனப் புகழ்ந்துள்ளார். இப்படிப்பட்ட இந்த தலைமுறையினர் , வலை தளம் எனும் மாய உலகில் இருந்து வெளியேறுவது, அறிவார்ந்த இளைய சமுதாயம் அமைவதற்கான நல்ல மாற்றம் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

* இந்தியாவில் ஜென் இசட் தலைமுறையினர் 38 கோடி பேர்
* தற்போதைய வயது 13-29
* பணி புரிவோர் 25%
* பொருட்கள் நுகர்வில் பங்களிப்பு 43%

* பொருளாதார ஏற்றத்துக்கு உதவி
வரும் 2030ல் ஜென் இசட் தலைமுறையினரின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 36 சதவீதமாக இருக்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அப்போது ரூ. 65,70,000 கோடி அளவுக்கு இந்த தலைமுறையினர் நேரடியாக செலவிடுவார்கள். மொத்தத்தில் இந்த தலைமுறையினர் மூலம் ரூ.116 லட்சம் கோடி அளவுக்கு பொருட்கள் நுகர்வு உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக அமையும் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இவர்களை கவரும் வகையில் உத்திகளை வகுக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தயாராகி வருவதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த ஜென் இசட்
* 1997 மற்றும் 2012ம் ஆண்டுகளுக்கு இடையே பிறந்தவர்கள் ‘ஜென் இசட்’ தலைமுறையினர் என்று அறியப்படுகின்றனர்.
* உலக அளவில் 200க்கும் மேற்பட்டோர் ஜென் இசட் தலைமுறையினராக உள்ளனர் என சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதாவது உலக அளவில் 30 சதவீதம் பேர் ஜென் இசட் தான். இந்திய அளவில் சுமார் 37.7 கோடி பேர் இந்த தலைமுறையை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
* பொருளாதார வளர்ச்சியில் ஜென் இசட் தலைமுறையினர் பங்களிப்பு முக்கிமானது. ஷாப்பிங் மட்டுமின்றி, பயணம், பேஷன், பொழுதுபோக்குக்கு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர்.
* மன நலத்துக்கு முக்கியத்துவம் தருகின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபட தியானம் போன்றவற்றில் ஈடுபட மொபைல் ஆப்ஸ் பயன்படுத்துகின்றனர் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் இருந்து விடுபட்டும் மன அழுத்தத்தை போக்கிக் கொள்கின்றனர்.
* ஆன்மீக விஷயங்களிலும் ஆர்வம் செலுத்துகின்றனர் என அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

Related Stories: