வறுமை, பசியை போக்கினால் நோய்களை ஒழித்து விடலாம்: சமூக மேம்பாட்டு அமைப்புகள் நம்பிக்கை

 

நவீன வளர்ச்சியில் நாடுகள் உச்சம் தொட்டு வரும் நிலையிலும் வறுமை, பசி, நோயின் பிடியில் சிக்கித்தவிக்கும் மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்து ெகாண்டிருக்கிறார்கள். இதுபோன்ற மக்களை மீட்டெடுத்து நல்வாழ்வு அளிப்பது அனைவருக்குமான நோக்கமாக இருக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை சார்பில் ஆண்டு ேதாறும் டிசம்பர் 20ம் தேதி (இன்று) சர்வதேச மனித ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. வறுமை நிலையை பொறுத்தவரை உலகளவில் தீவிர வறுமை விகிதம் 2019ல் 8.4 சதவீதமாக இருந்தது. இது 2020ல் 9.3 சதவீதமாக உயர்ந்தது. 2020ம் ஆண்டில் வறுமையின் விகிதம் உயர்ந்ததற்கு கொரோனா பெருந்தொற்று மிக முக்கிய காரணமாக இருந்தது. வறுமை, பசியை தொடர்ந்து மனிதர்களை தொடரும் மற்றொரு அவலமாக இருப்பது நோய் பாதிப்புகள். உலகளவில் 22சதவீதம் மக்கள் ஆரோக்கியம் இல்லாத சூழலில் வாழ்கின்றனர்.

இந்தவகையில் உலகளவில் 160 கோடி பேர் போதிய சுகாதாரம், மருத்துவ வசதிகள் இல்லாமல் நோய்களின் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர். இந்தியாவில் பல்வேறு நோய்களின் சராசரி பரவல் 11.4 சதவீதமாக உள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இப்படி மனிதவாழ்க்கையில் தொடரும் வறுமை, பசி, நோய் பாதிப்புகளை அவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பாக கருதக்கூடாது. இது அவர்களின் வாழ்க்கையை முடக்கி போடுவதோடு நாட்டின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடும். எனவே அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வறுமை, பசி, நோய் பாதிப்புகள் இல்லாத உலகத்தையும் நாடுகளையும் உருவாக்க வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாக சர்வதேச மனித ஒற்றுமை தினம் இருக்க வேண்டும் என்கின்றனர் சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள்.

இது குறித்து சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் மேலும் கூறியதாவது: வறுமை, பசி என்ற இரண்டையும் ஒன்றாக பொருத்திப்பார்க்கலாம். ஒரு மனிதரின் வறுமை தான் அவருக்கான தேவைகளை முழுமையாக கிடைக்காமல் செய்கிறது. இதில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசியங்களை கடந்து பசியால் தவிப்போரும் கணிசமாக உள்ளனர். வெறுமனே பசி என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால் விழிம்புநிலை மக்கள், நாடோடிகள், கொத்தடிமைகளாக இருப்போர் பசியால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் முதியோரும் பசியின் பிடியில் சிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த வறுமையும், பசியும் ஒரு மனிதனை நோயாளியாகவும் மாற்றி விடுகிறது.வறுமையால் ஏற்படும் பசிப்பிணி, உடலில் பல்ேவறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கும் இந்த இரண்டுமே காரணம். நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் வறுமை, பசி போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் இன்றளவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதே உண்மை. எனவே சர்வதேச மனித ஒற்றுமை தினத்தில் சக மனிதர்களின் பசிப்பிணியை போக்கவும், அதன்மூலம் அவர்களின் வாழ்வில் சூழ்ந்துள்ள வறுமையை ஒழிக்கவும் ஒவ்வொரு தனிமனிதரும் முன்வர வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

17% உணவு குப்பை தொட்டிக்கு செல்கிறது‘‘
‘‘உலகளாவிய அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் 90மில்லியன் டன்னுக்கு அதிகமான உணவு தூக்கி எறியப்படுகிறது. கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்கு கிடைக்கும் உணவுகளில் 17சதவீதம் குப்பை தொட்டிக்கு செல்கிறது என்று ஐநா சபையின் சுற்றுச்சூழல் திட்ட குறியீடுகள் தெரிவித்துள்ளது. திட்டமிடாமல் உணவு பொருட்களை தயாரிப்பதே இதற்கு முக்கிய காரணம். இப்படி வீணாகும் உணவுப்பொருட்களை நாம் நமக்கு அருகில் வசிக்கும் எளிய குடும்பங்களுக்கு ெகாடுத்து பசியை ேபாக்கலாம். ஆனால் அதற்கான மனம் பெரும்பாலானவர்களிடம் இல்லை. கொரோனா போன்ற பொதுமுடக்க காலத்தில் இந்தநிலை வெகுவாக குறைந்திருந்தது. திட்டமிட்டு உணவுகளை சமைத்து பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆங்காங்ேக மக்கள் வழங்கினர். இதனால் அப்போதைய காலகட்டத்தில் வழக்கத்தை விட வீணாகும் உணவுகளின் அளவு 22சதவீதம் குறைந்திருந்தது,’’ என்பது உணவுப்பொருட்கள் பயன்பாடு சார்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்.

முதல் அடித்தளமாக இருப்பதே இதுதான்
‘‘சாதாரண ஜலதோஷம் தொடங்கி கொடிய நோய்கள் வரை அனைத்தும் உடல்நலபாதிப்புகள் என்ேற வரையறுக்கப்பட்டுள்ளது. வயிற்றுக்கு போதிய உணவு இல்லாமல் இருப்பதே பல்வேறு நோய்களின் தாக்கத்திற்கு முழுமுதற்காரணம். சர்வதேச மருத்துவ ஆய்வுகளின் படி 4மணி நேரத்திற்கு ஒரு முறை வயிற்றுக்கு ஏதேனும் உணவு அளிக்க வேண்டும். இந்த சீரான உணவுமுறை உடலின் செயல்பாட்டை சீராக வைக்கும். முறையாக சாப்பிடாவிட்டால் மூளைக்கு வேண்டிய குளுக்கோஸ் தேவையான அளவு கிடைக்காது. குறிப்பாக ஹார்போ ஹைட்ரேட் உணவிலிருந்து எளிதாக கிடைக்கும் குளுக்கோஸ் கிடைக்காது. இது கிடைக்காவிட்டால் மூளை ேசார்வுறும். உடலில் சர்க்கரை சத்து குறையும். உடல் உணவு ேவண்டும் என்று உணர்த்தும் போது ஒதுக்க கூடாது. அதே நேரத்தில் கையில் கிடைத்ததை உட்கொண்டாலும் அபத்தம் தான். அரைகுறையாக உணவு கொள்பவர்களுக்கு சர்க்கரை குறைவு, வைட்டமின் சத்துக்கள் கிடைக்காமை, தலைவலி, கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். இந்தவகையில் மனிதர்களின் நோய்பாதிப்புகளுக்கு முதல் அடித்தளமாக இருப்பதே பசியும், வறுமையும் தான்,’’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

துல்லியமான பதிவு இல்லை
இந்தியாவை பொறுத்தவரை 2020ம் ஆண்டு நிகழ்ந்த கொரோனா பரவலில் 7கோடி பேர், தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டனர் என்று ஆய்வுகள் தெரிவித்தது. வறுமை குறித்த தரவுகள் இந்தியாவில் துல்லியமாக பதிவு செய்யப்படவில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. அதேநேரத்தில் உலக வங்கி கடந்தாண்டு (2024) வெளியிட்ட தரவுகளின் படி இந்தியாவில் 5.6கோடி பேர் தீவிர வறுமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உலகளவில் பசி என்பதும் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் பசி என்பது பிரதானமாக உள்ளது. மேலும் உணவு பற்றாக்குறை அதிகம் உள்ள நாடுகள் குறித்த ஆய்வுகளும் வெளியிடப்பட்டது. அயர்லாந்தின் கன்சர்ன் வேர்டுவைட் மற்றும் ஜெர்மனியின் வெல்ட்ஹங்கர்லைப் இணைந்து 19வது உலக பட்டினி குறியீட்டை வெளியிட்டுள்ளது. 127நாடுகளுக்கு இடையே இந்த ஆய்வு நடந்துள்ளது. இதில் பசிபிரச்னைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 105வது இடத்தை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: