பொருளாதார மேம்பாட்டில் பெரும் பங்கு; இந்தியர்களின் திறமை வெளிநாடுகளின் முன்னேற்றத்திற்கே அதிகம் பயன்படுகிறது: விழிப்புணர்வு தினத்தில் ஆதங்கம்

 

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது அவ்வையின் பொன்மொழி. இந்த வரிகளுக்கு ஏற்ப பல்லாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து சென்று பல்வேறு நாடுகளில் முகாமிட்டது மனிதகுலம். இந்தவகையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பிழைக்கச் சென்றனர் ஏராளமான இந்தியர்கள். இவர்கள் காலப்போக்கில் அங்கேயே தங்கிவிட்டனர். இவர்கள் அங்கேயே குடியுரிமை வாங்கி வாழ்வதும் அதிகரித்து விட்டது. இப்படி அங்கு வாழும் நமது மக்களின் உறவை நாம் எளிதில் துண்டித்து விட முடியாது. அவர்களையும் நாம் இணைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்று இந்திய அரசு முடிவு செய்தது. இதன் எதிரொலியாக ஆண்டு தோறும் ஜனவரி 9ம்தேதி (இன்று) வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவர்களை கவுரவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அவர்கள் குறித்த பல்ேவறு ஆய்வுகளை மேற்கொண்டு அரிய தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள வரலாற்று பேராசிரியர் நீலகண்டன் கூறியதாவது: 1830ம் ஆண்டுவாக்கில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்த இந்தியர்களில் பெரும்பாலானோர் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த நலிவடைந்த பிரிவினராக இருந்தனர். 1834ம் ஆண்டுக்கும், 1937ம் ஆண்டுக்கும் இடையே அதாவது 103ஆண்டுகளில் 3கோடி இந்தியர்கள் கடல்கடந்து சென்றுள்ளனர். அவர்களில் ஐந்தில் நான்கு பேர், மீண்டும் தாய்நாட்டுக்கே திரும்பி விட்டனர் என்று வரலாற்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இந்திய விடுதலைக்கு பிறகு இடம் பெயர்ந்த இந்தியர்கள் பெரும்பாலும் சமூக, பொருளாதார பிடிமானங்கள் உள்ள குடும்பங்களை சேர்ந்தவராக உள்ளனர். இதில் குறிப்பாக அமெரிக்காவுக்கு பயணப்பட்டோர் அதிக கல்வித்தகுதி கொண்டவர்களாக இருக்கின்றனர்.

1990ம் ஆண்டுகளுக்கு பிறகு திறன்சார்ந்த மக்கள் அதிகளவில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலைதேடிச் செல்பவர்களாக உள்ளனர். இப்படி கடல் கடந்து செல்லும் இந்தியர்களின் திறமையும், அறிவும் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கே அதிகளவில் பயன்படுகிறது. அதேநேரத்தில் பெரும்பாலானவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. பலநாடுகளில் இந்திய வம்சாவழியினர் எம்பிக்களாகவும், செனட்டர்களாகவும், அமைச்சர்களாகவும் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பதவிகளில் திறம்பட பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு பிரிவுகளில் நிர்வாகிகளாகவும், எழுத்தாளர்களாகவும் தடம் பதித்துக் கொண்டிருக்கின்றனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவழியினர் என்று உலகமெங்கிலும் தற்போது 3கோடி இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சீனாவுக்கு அடுத்த படியாக வெளிநாடுகளில் இந்திய வம்சாவழியினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கையே அதிகளவில் உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 10ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் அந்நியச் செலவாணி உயர்ந்துள்ளது. அரசியல், நிர்வாகம், கலை, இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு மிகச்சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது ஒன்றிய மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களும், அவர்களுக்கு அளிக்கும் கவுரவமும் மீண்டும் நமது தேசத்துடன் புதிய பிணைப்பை ஏற்படுத்தி வருகிறது.

நமது வம்சாவழிகளின் வாரிசுகள், தங்களது முன்னோரின் பெருமை அறிய ஆவலுடன் வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதற்கு உதாரணமாக அரசு கொண்டு வந்துள்ள வேர்களை தேடி விழுதுகள் திட்டம் இதற்கொரு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. இவ்வாறு நீலகண்டன் கூறினார்.

இன்னல்களும் தொடர்கிறது
‘‘பல்லாண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த இந்தியர்கள், தாங்கள் குடியமர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளனர். தேயிலை, கோகோ, கரும்பு தோட்டங்களில் வேலை செய்த இவர்களின் ஐந்தாவது தலைமுறையினர் இன்றளவும் உலகின் பல்ேவறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். உழைப்பு, திறமை, அறிவால் உலகின் பல பகுதிகளை மேம்படச் செய்த இவர்களும், இவர்களின் வாரிசுகளும் ஏதாவது ஒரு வகையில் இன்றளவும் இன்னல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர் என்பது வேதனைக்குரியது,’’ என்பதும் ஆய்வாளர்களின் ஆதங்கம்.

அனுசரிப்பதற்கான காரணம் இதுதான்
இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்கும் முக்கியமானது. வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் பலர், காலப்போக்கில் அங்கேயே குடியேறிவிடுகின்றனர். அதோடு குடியுரிமையும் பெற்றுவிடுகின்றனர். இதுபோன்றவர்களை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு வலுவூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் 2003ம் ஆண்டு ஜனவரி 9ம்தேதியன்று வெளிநாடு வாழ் இந்தியர் தினம் குறித்த அறிவிப்பை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். தென்ஆப்பிரிக்காவில் இருந்து, காந்தியடிகள் 1915ம் ஆண்டு, ஜனவரி 9ம்தேதி இந்தியா வந்தார். இந்தநாளை நினைவு படுத்தும் விதமாகவும் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

பாகுபாடுகள் இல்லாத பரவல்
உலகளவில் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கல்வி, வேலை, தொழில் என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த நாடுகளின் பல்வேறு துறைகளில் உயர்ந்த பொறுப்புகளையும் வகிக்கின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கியஅரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பெரிய நாடுகள் மட்டுமன்றி, உலகின் சிறிய நாடுகளிலும் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் தொழிலாளர்களாக மட்டுமன்றி, தலைமை பொறுப்புகளையும் இந்தியர்கள் வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம் உயர பங்களிப்பு
‘‘என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நமது நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள். உலகளவில் இந்தியாவை பிரதிபலிக்கும் பிம்பங்களாக இவர்கள் உள்ளனர். தாய்நாட்டுக்கு பல்வேறு வழிகளில் அவர்களின் பங்களிப்பு தொடர்கிறது. குறிப்பாக பொருளாதாரத்திற்கு இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர்கள் நமது நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ரெமிடன்ஸ் முறையில் அனுப்பும் பணத்தால் நாட்டின் அந்திய செலவாணி கையிருப்பு அதிகரிக்கிறது. இந்தியாவின் மைக்ரோ-பொருளாதார மட்டத்தில் ஸ்திரத்தன்மையை இது உறுதி செய்கிறது. இதன்காரணமாக நாட்டின் நுகர்வு மற்றும் முதலீடுகளும் ஊக்கம் அடைகிறது. வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தின் மதிப்பு தற்ேபாது 600பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது’,’ என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

Related Stories: