17 மாநிலங்களில் தாய்க்குலங்களே முன்னோடிகள்; இந்தியாவில் உறுப்பு தானம் செய்ய 60% பெண்கள் ஆர்வம்: தென் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடம்

 

 

சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டுவது, ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் செல்வது, போக்குவரத்து சிக்னலை மீறுவது, சாலையின் எதிர்புறத்தில் வருவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் காரணமாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வரும் நபர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், சில நேரங்களில் உறுப்பு சேதம், மூளைச்சாவு மற்றும் உயிரிழப்பு ஏற்படும் சூழலும் உள்ளது. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட குடு ம்பத்தினர் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் உடல் உறுப்புகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமுதாயத்தில் உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில், உடல் உறுப்பு தானம் வழங்கும் நபர்களுக்கு, அவர்களின் இறுதி சடங்கின் போது, அரசு மரியாதை செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போது வரை 250க்கும் மேற்பட்டோர் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உள்ளனர். மேலும், 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உடல் உறுப்பு தானம் வழங்க இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அரசு மரியாதை என்ற அறிவிப்புக்கு பிறகு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. அதன்தொடர்ச்சியாக தற்போது, உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கவுரவப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் கவுரவ சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர் எழுதப்பட உள்ளது. இந்திய அளவில் ஒப்பிடும்போது உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் என்பது முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. இதனிடையே கடந்த ஆண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த ஆய்வு மேற்ெகாள்ளப்பட்டது. குறிப்பாக தற்காலிக ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் பெற, புதுப்பிக்கும் விண்ணப்பித்ததில் உயிரிழந்த பிறகு உடல் உறுப்புகள் மற்றும் உடல் திசுக்கள் தானம் செய்ய விருப்பம் உள்ளதா என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் உயிரிழந்த பிறகு உடல் உறுப்புகள் தானம் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: சாலை விபத்தால் உடல் உறுப்பு சேதம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களால் உறுப்பு இழப்பு ஏற்படுகிறது. இதனால் உடல் உறுப்புகளின் தேவையும், ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது.

உடல் உறுப்பு தானம் குறித்து இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடல் உறுப்பு தானத்தை ஊக்குவித்து வருகின்றனர். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உடல் உறுப்பு தானம் அளிக்கும் நபர்களுக்கு அரசு மரியாதை என்பது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக பலர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து டிரைவிங் லைசென்ஸ் பெறும் விண்ணப்பங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பெரும்பாலானோர் உயிரிழந்த பிறகு உடல் உறுப்பு மற்றும் உடல் திசுக்களை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, உடல் உறுப்பு தானம் செய்பவர்களில் ஆண்களை விட, பெண்கள் அதிக விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 11 சதவீதம் ஆண்கள், 10.8 சதவீதம் பெண்கள் தங்களது உறுப்புகளை தானம் செய்ய விண்ணப்பத்தில் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.

கேரளாவில் 3.7 சதவீத ஆண்களும், 5.2 சதவீத பெண்களும், கர்நாடகாவில் 10.7 சதவீத ஆண்களும், 10.8 சதவீத பெண்களும், ஆந்திராவில் 12 சதவீத ஆண்களும், 13 சதவீத பெண்களும் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி வழங்கியுள்ளனர். டெல்லியில் 27 சதவீதம் பெண்களும், ஒடிசா மாநிலத்தில் 21 சதவீதம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16.8 சதவீதம், மகாராஷ்டிரா மாநிலத்தில் 20.9 சதவீதம் பெண்கள் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 21 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 17 மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள், அதிகவில் உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். 2023ம் ஆண்டு 39.2 சதவீதம் ஆண்கள், 60.7 சதவீதம் பெண்கள் அனைத்து உறுப்புகளையும் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆண்கள் 64.8 சதவீதம், பெண்கள் 35.2 சதவீதம் பேர் உறுப்புகளை தானமாக பெற்று சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: