ஈரோடு மாவட்டத்தை திமுகவின் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றி காட்டுவேன்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பேச்சு

சென்னை: ஈரோடு மாவட்டத்தை திமுகவின் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றி காட்டுவேன் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார். திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பேசியதாவது: ஈரோடு மாவட்டம் இந்த நிமிடத்தில் இருந்து, திமுகவின் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றி காட்டுவதற்கு, நாம் இந்த நேரத்தில் சூளுரை ஏற்றிக்கொள்ள வேண்டும். தமிழக முதல்வருக்கு எனது பணிவு சார்ந்த வார்த்தை என்வென்றால், நாங்கள் எல்லாம் வந்து தான் திமுகவை ஈரோடு மாவட்டத்தில் வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக ஒரு மிகப்பெரிய ஆலமரம்.

ஆனாலும் கூட அந்த ஆலமரத்திலே தேடி வந்த பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகப்பெரிய பண்புக்கு பாத்திரமானவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்றைக்கு இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை பார்த்து பாராட்டி கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய மாநிலங்களில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு உதாரணமாக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்று புகழ்ந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மாபெரும் சக்தியாக திமுக திகழ்ந்து கொண்டிருந்தாலும் கூட, ஈரோடு மாவட்டத்தில் முழுமையாக வெற்றியை பெற முடியவில்லை என்ற உங்களின் ஏக்கம், அதை போக்குவதற்காக ஒரு அணிலாக நாங்கள் வந்திருக்கிறோம்.

எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற பேரூராட்சியாக இருந்தாலும், நகராட்சியாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் இனி 100 சதவீதம் வெற்றியை தமிழக முதல்வர் பொற்பாதங்களில் வைப்பது தான் எங்களுடைய ஒரே வேலையாக இருக்கும். தூங்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இயக்கத்திற்காக பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் எங்கோ இருந்து வந்தாலும் கூட, முதல்வர் என்ற மாபெரும் பொறுப்பில் இருக்கின்ற உங்கள் அருகில் சாதாரண தொண்டனுக்கு இருக்கை போட்டு, தோளிலே தட்டிக் கொடுக்கும் தாயுள்ளம் கொண்ட தலைவர் மு.க.ஸ்டாலின்.

தற்போது பொறுப்பாளர்கள் தான் இணைந்துள்ளார்கள். இது மணியோசை தான். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி கொடுத்தால், ஒரு மாதம் அவகாசம் கொடுத்தால், பல்வேறு இயக்கங்களை சேர்ந்த 25 ஆயிரம் தொண்டர்களை திமுகவில் இணைந்து காட்டுவேன். இதற்கு அவர் அனுமதி கொடுக்க வேண்டும். தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு வரும்போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், நானும் அமைச்சர் முத்துசாமியும் இணைந்து 25,000 தொண்டர்களை திமுகவில் இணைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘‘மாற்று இயக்கத்திலிருந்து வந்தாலும் தாயுள்ளத்துடன் மிகப்பெரிய மரியாதையுடன் எங்களை முதல்வர் நடத்தினார். முதல்வர் சிறப்பான நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வருகிறார். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் செயல்படுகிறார். ஊழலற்ற நேர்மையான அரசை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் நேர்வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவருடைய பாங்கு எங்களை ஈர்த்தது. பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்பதை ஆட்சியமைத்து முதலாவதாக நடைமுறைப்படுத்தியதை இந்தியாவில் அனைவரும் உற்றுப்பார்க்கிறார்கள். தமிழகத்தில் நிரந்தர முதல்வராக மக்களால் ஏற்கக்கூடிய முதல்வராக இருக்கிறார். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்குகிறார்.

சமூகநீதி வீரராக விளங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பாங்கு வித்தியாசமாக இருக்கிறது. புதிய ஆட்சி அமைந்தால் பழைய ஆட்சியாளர்களை பழிவாங்கும் மனப்பான்மை இருக்கும். ஆனால், அவர் எந்த திட்டங்களை செயல்படுத்தும்போதும் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளையும் அழைத்து நல்ல கருத்துகளை ஏற்று, தலைமைப்பண்புக்கு உதாரணமாக விளங்குகிறார். இளைஞர்களையும் மகளிரையும் ஈர்க்கும் நல்லாட்சியை நடத்துகிறார்’’ என்றார். ஊழலற்ற நேர்மையான அரசை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் நேர்வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவருடைய பாங்கு எங்களை ஈர்த்தது.

Related Stories: