அதிமுக ஆட்சியில் பத்திர பதிவுத்துறை முறைகேடு விசாரித்து உரிய நடவடிக்கை: அமைச்சர் பி.மூர்த்தி உறுதி

மதுரை: மதுரை தொழிலாளர் நலத்துறை அலுவலக வளாகத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:அதிமுக ஆட்சிக்காலத்தில், பத்திர பதிவுத்துறையில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட மதிப்பு குறைத்து, பத்திரப்பதிவு செய்தவர்கள் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி, தேனி மாவட்டத்தில் முத்திரைத்தாள் தனி தாசில்தார் செந்தில்குமார், அரசுக்கு செலுத்த வேண்டிய ₹20 லட்சத்து 23 ஆயிரத்து 680 பணத்தை தன்னுடைய வங்கிக்கணக்கில் செலுத்தியதற்காக இரவோடு, இரவாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

 இதுபோன்று பத்திர பதிவுத்துறையில் கடந்த காலத்தில் நடந்த ஆள் மாறாட்டம், போலிப்பத்திரங்கள் போன்றவை எல்லாம் கண்டறிந்து, அதிரடி நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது நடைபெற வாய்ப்பில்லை. பொதுமக்கள் மிகவும் எளிதாக அணுகும் வகையில் தற்போது பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் சொல்லாததைக்கூட 2 மாத காலத்திற்குள்ளாக ₹10 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: