அதிமுக ஆட்சியில் ₹2 கோடியில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் வீணான அவலம்-சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் காலி செய்தனர்

சூளகிரி : சூளகிரி அருகே கடந்த அதிமுக ஆட்சியில் தவறான திட்டமிடல் மூலம் வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இதனால், லேசான மழை பெய்தாலே அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்து தேங்குவதால், அதிகாரிகள் புதிய கட்டிடத்தை காலி செய்து, பழைய கட்டிடத்திற்கு சென்றுள்ளனர். சூளகிரி பிடிஓ அலுவலக வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வேளாண்மை துறை அலுவலகம் இயங்கி வந்தது. அங்கு போதிய வசதியில்லாததால் சூளகிரி-உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்ட கடந்த அதிமுக ஆட்சியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ₹2 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இதையடுத்து, சட்டசபை தேர்தலையொட்டி அவசர அவசரமாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் கடந்த ஜனவரி மாதம்  விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு தராமல் அதிமுக நிர்வாகிகளை மட்டும் வைத்து திறந்து வைத்தார். தொடர்ந்து, பிடிஓ அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த வேளாண்மை துறை, தோட்டகலைத்துறை, வேளாண் பொறியாளர் துறை, வேளாண்மை விற்பனை துறை, விதை நாற்று துறை உள்ளிட்ட அலுவலகங்கள் புதிய அலுவலகத்தில் இயங்க ஆரம்பித்தது.

இந்நிலையில், தவறான திட்டமிடல் காரணமாக சாலையை விட 3 அடி பள்ளத்தில் கட்டப்பட்டதால், அலுவலக காம்பவுண்ட் சுவரை ஒட்டி செல்லும் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அலுவலக வளாகத்தில் கடந்த சில மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனிடையே மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைநீரும் அலுவலக வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கழிவு நீருடன் மழைநீர் தேங்கியதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதனால், அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் தவித்த அதிகாரிகள், அலுவலக கோப்புகள் உள்ளிட்டவற்றை லாரியில் போட்டு எடுத்துக் கொண்டு மீண்டும் பழைய அலுவலகமான பிடிஓ அலுவலகத்திற்கே சென்று விட்டனர். தற்போது, பழைய கட்டிடத்திலேயே அலுவலகம் செயல்படுகிறது. இதுகுறித்து திமுக மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக்ரஷீத், தமிழக விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் கூறுகையில், ஒப்பந்ததாரர் மூலம் கட்டப்பட்ட கட்டிடத்தை சுற்றிலும் பல மாதங்களாக கழிவுநீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது.

முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட இந்த ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை தற்போது, பூட்டிவிட்டு பழைய அலுவலகத்திற்கே அதிகாரிகள் சென்றுவிட்டனர்.

அரசு பணத்தை வீணாக்கி கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் அதற்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: