வளர்ச்சி பணிகளுக்கு தடையாக இருந்ததால் அதிமுக ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கக்கோரி ஈகுவார்பாளையம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு அதிமுக தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் ஊராட்சி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறி ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு அதிமுக தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார். இவர் தரப்பு அதிமுகவினருக்கும்,  ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர் தரப்பிற்கும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து இரு தரப்பிற்கும் தொடர்ந்து முன் விரோதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த இருநாட்களாக இரு தரப்பிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார்,   ஈகுவார்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், ஊராட்சி திட்டங்களை நடக்கவிடாமல் தடுப்பதாகவும் கோஷம் எழுப்பினர். அதே நேரம் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமாருக்கு ஆதரவாக சில பெண்கள் அங்கு வந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஒன்றிய குழு தலைவராக உள்ள காரணத்தால் உயர் சாதி சமூகத்தினர் அவர் மீது அவதூறு பரப்புவதாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 ஒரு கட்டத்தில் இரு தரப்பும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதைத்  தொடர்ந்து ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர் தரப்பினர் சுமார் 50 பேர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டதும் ஒன்றிய குழு தலைவர் ஆதரவு பெண்கள் 4 பேர் சாலையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் 2 பெண்கள் மற்றும் ஒரு 18 வயது நிரம்பிய சிறுவனை குண்டு கட்டாக தூக்கி  வாகனத்தில் ஏற்றினர். அதனை தடுக்க முயன்ற ஒன்றிய குழு தலைவரின் மனைவி மஞ்சுஷாவையும் போலீசார் குண்டு கட்டாக போலீஸ் வாகனத்தில்  ஏற்ற முயன்றனர்.

அப்போது அங்கு வந்த ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் முதலில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை ஒன்றுமே கேட்காமல், 4 பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்களையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றியது ஏன் என்றும், தனிப்பட்ட முன் விரோதம் காரணமாக தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர் என்று  போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் இரு தரப்பையும் போலீஸார் சமாதானப்படுத்திய நிலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட  2 பெண்கள் மற்றும் சிறுவனை மாலை 6 மணிக்கு பிறகு போலீசார் விடுவித்தனர்.

Related Stories: