தமிழக அரசால் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் பலருக்கும் வரப்பிரசாதம்: மியாட் மருத்துவமனை வரவேற்பு

சென்னை: தமிழக அரசால் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் மருத்துவ  காப்பீட்டு திட்டம் பலருக்கும் வரப்பிரசாதம் என்று மியாட் மருத்துவமனை வரவேற்றுள்ளது. இது குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மியாட் மருத்துவமனை 10,000க்கும் மேற்பட்ட கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முழு அளவிலான வசதிகளைக் கொண்ட தமிழ்நாட்டின் வெகுசில தனியார் மருத்துவமனைகளில் மியாட் மருத்துவமனையும் ஒன்றாகும். கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் உச்சத்தில், மாநிலம் முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தில் கடுமையான பற்றாக்குறை இருந்ததால் மியாட் மருத்துவமனையும் ஒரு கட்டத்தில் ஸ்தம்பித்தது. தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மே 17ம் தேதி மியாட் மருத்துவமனைக்கு வந்தார்.

அவர் மாநில அரசின் அனைத்து ஆதரவையும் உறுதி செய்தார், விரைவில் ஒரு நேர்மறையான மாற்றம் ஏற்படும் என்று உறுதியளித்தார். மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்   சந்தித்து கோவிட் -19 நிலைமை குறித்து பேசினார். ஆக்சிஜன் நெருக்கடியை தீர்ப்பதில் முதலமைச்சரின் தீர்மானமான போக்கு மியாட்டிற்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மியாட் மருத்துவமனை மட்டுமின்றி, சென்னையிலுள்ள பிற மருத்துவமனைகளையும் ஒரு பெரிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றினார். முதலமைச்சரின் முயற்சிகளாலும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் மியாட் மருத்துவமனையால் தடையின்றி கோவிட் சிகிச்சைகளை வழங்க முடிந்தது.

மேலும் அதிகமான படுக்கைகள் சேர்க்கப்பட்டன. அதிகமான நோயாளிகளை மீட்க முடிந்தது. கோவிட்-19லிருந்து மீள்வதற்கான பாதையில் பயணிக்க சென்னையை வழிநடத்திய தமிழக அரசின் முடிவுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் மியாட் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இந்த கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் உலகத்தரத்திலான ஆரோக்கியப் பராமரிப்பு கிடைப்பதை தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் சாத்தியமாக்கியது. மாநிலத்தில் வசிக்கும் பொருளாதாரம் குறைவான மக்களுக்கு மருத்துவ காப்பீட்டை வழங்குவதற்காக தமிழக அரசால் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பலருக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் உதவியுடன் அவசர மருத்துவ செலவினங்களுக்கான பாதுகாப்பினை மக்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறு மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: