புதுச்சேரி கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கத்தில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி வெடிகுண்டு சோதனை

புதுச்சேரி : புதுச்சேரி- தமிழக ரவுடிகள் வெடிகுண்டு வீசி நேற்று மோதலில்   ஈடுபட்டதால் கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்   ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடியாக வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.வில்லியனூர்  அடுத்த  கோர்க்காடு பகுதிகளில் 2 மாதங்களில் அடுத்தடுத்து நாட்டு  வெடிகுண்டுகள்  வெடித்தன. இதில் பெண் உள்பட இருவர் காயமடைந்தனர். வெடிகுண்டு சம்பவம்  தொடர்பாக 8 பேர் வரை கைது செய்து சிறையில்  அடைக்கப்பட்டனர். இதற்கிடையே  கடலூர் அருகே தமிழக- புதுச்சேரி எல்லை  பகுதியான கீழ் குமாரமங்கலத்தில்  ரவுடிகள் இருகோஷ்டியாக நேற்று முன்தினம்  மோதலில் ஈடுபட்டனர்.

நாட்டு  வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும்  மோதலில் ஈடுபட்டதில் 3 பேர்  படுகாயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுதொடர்பாக தமிழக போலீஸ் அதிகாரிகள் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில்  புதுச்சேரி, வில்லியனூர் அடுத்த  கோர்க்காடு மற்றும் கரிக்கலாம்பாக்கம்  அதை ஒட்டியுள்ள பகுதிகளில் போலீசார்  நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.  வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்  குழுவுடன் இணைந்து சட்டம்- ஒழுங்கு  காவல்துறையினர் ரவுடிகளின் வீடுகள்  மற்றும் புதர்கள், சந்தேகத்துக்கிடமான  வகையில் உள்ள இடங்களை ஆய்வு செய்தனர்.  வெடிகுண்டு நிபுணர்  குழுவினர்,  மோப்பநாய் சோதனை பிரிவினர் ஆகியோர் ஆங்காங்கே சோதனைகளை  மேற்கொண்டனர். 3  மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை.இருப்பினும்  ரவுடிகளின் வீடுகளில்  இருந்த உறவினர்களை காவல்துறையினர் கடுமையாக  எச்சரித்தனர்.

Related Stories: