குளியல் தொட்டியில் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்த திருவானைக்காவல் கோயில் யானை அகிலா..!

திருச்சி: குளம்போல் தண்ணீர் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்த திருவானைக்காவல் கோயில் யானை அகிலா. யானைகள் இயல்பாகவே தண்ணீரைக் கண்டால் குதூகலமாகிவிடும். தண்ணீரை உறிஞ்சி உடலில் விசிறியடித்துக் கொள்ளும். அந்த வகையில், திருச்சி திருவானைக்காவல் கோயில் யானை அகிலா, தனக்காகக் கட்டப்பட்ட குளியல் தொட்டியில் முதல் முறையாக இன்று இறங்கி குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தது.

பஞ்சபூதத் தலங்களில் நீர்த்தலமாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் அகிலா என்ற யானை 2011 முதல் சேவையாற்றி வருகிறது. யானை அகிலாவை அதன் பாகன்கள் தினமும் ஷவரில் குளிப்பாட்டி வந்த நிலையில், கோயில் வளாகத்துக்குள்ளேயே நாச்சியார் தோப்புப் பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய குளியல் தொட்டி கட்டும் பணி அண்மையில் தொடங்கியது.

சுவர்கள் பூசப்படாத நிலையில், சிறிதளவு தண்ணீர் நிரப்பி, குளியல் தொட்டிக்குள் இறங்கி ஏறுவதற்கு யானை அகிலாவுக்குச் சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், குளியல் தொட்டி கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் முறையாக தண்ணீர் நிரப்பப்பட்ட குளியல் தொட்டிக்குள் இறங்கி ஆனந்தமாகக் குளித்தது யானை அகிலா. தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள் வந்து, யானை குளிப்பதைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

Related Stories: