சென்னை: தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயரில் வகுப்பறை அமைக்கும் புதிய நடைமுறை இன்று அமல்படுத்தப்பட்டது.
தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு, கலைத் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில், அவர்கள் பயிலும் வகுப்பறைக்கு அந்த மாணவரின் பெயரால் அழைக்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளில் இன்று(ஜனவரி .09) முதல் அமல்படுத்தப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் சர்மி கஸ்தூரி, முத்துச்செல்வி மாநில அளவில் குத்துச்சண்டையில் தங்கம் வென்றனர். மாணவிகளை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து மாணவிகளின் பெயர் பலகை அடங்கிய பதாகை வகுப்பறைக்கு பெயராக வைக்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம் வெற்றி பெற்ற மாணவர்களை பெருமைப்படுத்துவதோடு, பிற மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். ஒரே வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் சாதனை புரிந்திருந்தால், அருகிலுள்ள பிற வகுப்பறைகளுக்கு அவர்களின் பெயர்கள் சூட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முழுவதும் அந்த வகுப்பறைகள் மாணவர்களின் பெயர்களால் மட்டுமே அழைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
