புதிய விளையாட்டு அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை துரிதபடுத்தும் வகையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் சேகர்பாபு!

 

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் , வருகின்ற 21.01.2026 அன்று ஸ்டான்லி மருத்துவமனை அருகில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் 776 குடியிருப்புகளின் பிரமாண்டமான கட்டிடத்தை தமது பொற்கரங்களால் திறந்து வைக்கவுள்ளார் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (9.1.2026) துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெரு மற்றும் அண்ணா பிள்ளை தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு மையம், 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சமுதாய நலக்கூடம், மாநகராட்சி அச்சகம் மற்றும் விளையாட்டுத் திடல் என “ஒருங்கிணைந்த வளாகம் ” கட்டுமானப் பணிகளை துரிதபடுத்தும் வகையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்களை அறிவுறுத்தி, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் இராயபுரம் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் உள்ள மூலகொத்தளத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய விளையாட்டு அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை துரிதபடுத்தும் வகையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களை அறிவுறுத்தினார்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தலைவருமான பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் இருக்கின்ற மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு யாரும் நினைத்து பார்த்திராத அளவிற்கு கனவு திட்டமாக இருந்ததை நினைவாகின்ற வகையில் இதே இடத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து இன்றைக்கு களஆய்வினை மேற்கொண்டோம். வடசென்னை பகுதியில் சாலை ஓரமாகவும், கால்வாய் ஓரமாகவும் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களுக்காக, வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஸ்டான்லி மருத்துவமனை அருகிலும், “வாட்டர் பேசின் சாலை” என்று அழைக்கப்படும் தண்ணீர் தொட்டி சாலையிலும் ஒரு திட்டம் முதலமைச்சர் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. 776 குடியிருப்புகள் கொண்ட ஸ்டான்லி மருத்துவமனை அருகிலுள்ள இந்த குடியிருப்புகள், தனியார் குடியிருப்புகளுக்கு நிகராக, நீச்சல் குளத்தைத் தவிர மற்ற அனைத்து தேவைகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் படைப்பகம், நூலகம், சமுதாயக் கூடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான உடற்பயிற்சி கூடம், நடைப்பயிற்சிக்கான நடைபாதை, பொழுதுபோக்கிற்கான அமர்விடங்கள் ஆகியவை இதில் அடங்கும். அதே இடத்திலேயே தங்களுடைய நியாயவிலை கடைகளில் பொருட்கள் பெறும் வசதியும், நியாயவிலை கடைகள், அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து, சிறப்போடு தனியார் கட்டிடத்திற்கு இணையாக இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் , வருகின்ற 21ஆம் தேதி (21.01.2026) அன்று ஸ்டான்லி மருத்துவமனை அருகிலுள்ள 776 குடியிருப்புகளின் கட்டடத்தை தமது பொற்கரங்களால் பயனாளிகளுக்கு அந்த வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை ஒப்படைத்து, இந்த பிரமாண்டமான கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். வட சென்னை வளர்ச்சி திட்டத்தில் ஒரு மைல் கல்லாக, பல்வேறு அற்புதங்களையும், மாற்றங்களையும் நிகழ்த்திய தமிழக முதல்வர் அவர்களின் சாதனைக்கு, வடசென்னையில் ஒரு எடுத்துக்காட்டாகவும், அவரின் அடையாளமாகவும், “கார் உள்ளளவும் கடல் உள்ளளவும் திகழும்”அதே பாணியில், முதல் கட்டமாக வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 700 குடியிருப்புகளும், இரண்டாம் கட்டமாக 140 குடியிருப்புகளும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் இரத்த சுத்திகரிப்பு மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் பொருத்தும் மையம், மேலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாக ஏற்படும் மூட்டு வலி போன்ற உபாதைகளுக்கான பிசியோதெரபி நிலையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. இதே வளாகத்திற்குள்ளாக, குறைந்த கட்டணத்தில் தனியார் மண்டபங்களுக்கு நிகராக ஒரு திருமண மண்டபமும் அமைக்கப்படுகிறது. இன்றைய சூழலில் திருமணம் என்றாலே லட்சக்கணக்கான செலவுகள் ஏற்படுகின்ற நிலையில், இது மக்களுக்கு பெரும் பயனளிக்கும். அதேபோல், சமூக சீர்கேடுகளிலிருந்து மாணவர்களை பாதுகாக்க உடற்பயிற்சி கூடமும், விளையாட்டு அரங்கமும் தேவைப்படுவதால், சிறந்த தகுதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கமும் அமைக்கப்படுகிறது.

இதனுடன், அரசாங்கத்திற்காக அரசு அச்சகத்திற்கான ஒரு கட்டிடமும் இதே இடத்தில் கட்டி வழங்கப்பட உள்ளது. சுமார் 6.30 ஏக்கர் நிலப்பரப்பில், அரசு அச்சக கட்டிடம், திருமண மண்டபம், விளையாட்டு மைதானம், 700 குடியிருப்புகள் கொண்ட குடியிருப்பு வளாகம், இரத்த சுத்திகரிப்பு நிலையம் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த வளாகம், வட சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு பல திட்டங்களை செயல்படுத்தும் வகையில், திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் தமிழக முதல்வர் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளார். தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக, இவை அனைத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதிமுகவோடு பாமக கூட்டணி குறித்த செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் அவர்களின் பதில்: எங்களோடு இணைந்து உள்ள கூட்டணி உறுதியோடும் சிறப்போடும் பயணித்து வருகிறது. எங்கள் முதலமைச்சர் அவர்களின் கொள்கை, மக்கள் பணி, மக்களின் முன்னேற்றம், மக்களின் தேவைகள் ஆகியவற்றை அறிந்து, தெரிந்து செயல்படுவதுதான். அதற்காக தேவையான நேரத்தை செலவிட்டு செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம், மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறோம்.

எத்தனை கூட்டணிகள் ஒன்றாக இருந்தாலும், தமிழக முதல்வர் ஆட்சியில் இருக்கும் இந்த நான்கரை ஆண்டுகளில் செய்த மக்கள் பணிகளை மக்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள். எங்கு பார்த்தாலும் “மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்”என்ற குரல்தான் எங்கள் காதில் ஒலிக்கிறது. இவ்வாறு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இந்த ஆய்வுகளின்போது சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், சிஎம்டிஏ மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மு.இந்துமதி, கண்காணிப்புப் பொறியாளர்கள் பாலமுருகன், ராஜன்பாபு, மாநகராட்சி மண்டல அலுவலர் விஜய்பாபு, உள்ளாட்சித் பிரதிநிதி எஸ்.முரளி, மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Related Stories: