பாஜக முக்கிய நிர்வாகிகள் மீண்டும் திரிணாமுல் கட்சியில் இணைவு

கொல்கத்தா: மேற்குவங்க வடக்குப் பகுதிகளில் பாஜகவின் முக்கியத் தலைவராக செயல்பட்ட கங்காபிரசாத் சர்மா அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் கட்சியில்  இணைந்தார். மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் விலகி பாஜகவில் இணைந்தனா். ஆனால், தோ்தலில் திரிணாமுல் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதனால், கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பலர் மீண்டும் திரிணாமுல் கட்சிக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், வடக்கு மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த பாஜக நிர்வாகியும், அலிபுர்தார் மாவட்ட பாஜக தலைவருமான கங்காபிரசாத் சர்மா மற்றும் 7  முக்கிய நிர்வாகிகள் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர்.

சமீபத்தில் பாஜகவின் முக்கிய முகமாக இருந்த முகுல் ராய் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து கங்காபிரசாத் சர்மா கூறுகையில், ‘பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது மக்களின் விருப்பங்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் கட்சி தாவியுள்ளதாக பேரவை எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை. முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ் பணிபுரிய விரும்புகிறேன்’ என்றார்.

Related Stories: