கொரோனா பாதிப்பால் 72 கிலோ எடையை இழந்த ‘பாடி பில்டர்’: தொற்றில் இருந்து மீண்டதால் நிம்மதி

ஐதராபாத்: தெலங்கானாவில் கொரோனா பாதித்த பாடி பில்டர் ஒருவர், தனது எடையில் இருந்து 72 கிலோ அளவிற்கு இழந்துள்ளார். இருந்தும், அவர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர். தெலங்கானா மாநிலம் மல்கஜ்கிரியைச் சேர்ந்த ‘பாடி பில்டர்’ சுஷில் குமார் (32), கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், உயர் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அப்போது பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் இல்லை. அதனால், அவரது குடும்பத்தினர் திரைப்பட நடிகர் சோனு சூட்டை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.

அவரது முயற்சியில், கடந்த மே 19ம் தேதி மலக்பேட்டிலுள்ள யசோதா மருத்துவமனையில் சுஷில் குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவரது நுரையீரலில் சுமார் 80 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டு இருந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு எக்மோ சிகிச்சை தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் கூறினர். இருந்தும், தொடர் சிகிச்சைக்கு பின்னர் சுஷில் குமாரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாடி பில்டரான சுஷில் குமார், கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பு 100 கிலோவுக்கு மேல் அவரது எடை இருந்தது. ஆனால், இப்போது 72 கிலோ எடையை இழந்து 28 கிலோ எடையுடன் உள்ளார். நாளடைவில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சராசரி எடையை அடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: