முஸ்லீம் நண்பனின் சகோதரி கடத்தல்: ரயிலை துரத்திக் கொண்டு 230 கி.மீ காரில் பறந்த இந்து நண்பன்; போலீசாரின் உதவியால் பத்திரமாக மீட்பு

ஜான்சி: உத்தரபிரதேசத்தில் முஸ்லீம் நண்பனின் சகோதரியை ஒரு கும்பல் காரில் கடத்தி செல்வதை அறிந்த இந்து நண்பன், காரில் 230 கி.மீ ரயிலை துரத்திக் கொண்டு சென்று போலீசாரின் உதவியுடன் பத்திரமாக மீட்டார்.  உத்தரபிரதேச மாநிலம் பண்டா அடுத்த பிசாண்டா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த 10ம் தேதி  17 வயது சிறுமியை கடத்திச் சென்று, அவனின் நான்கு நண்பர்களிடம் ஒப்படைத்தான். அவர்கள், சிறுமியை பண்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் அழைத்துக் கொண்டு மும்பை நோக்கிச் சென்றனர். சிறுமி கடத்தப்பட்ட விவகாரம், அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது முஸ்லீம் நண்பனின் சகோதரியை ஒரு கும்பல் கடத்திச் சென்றதை அறிந்த இந்து நண்பர், அந்த கும்பலை பிடிக்க திட்டமிட்டாார்.

தன் நண்பனின் சகோதரியை கடத்தல் கும்பல் ரயில் அழைத்து செல்வதால் அவர்களை பிடிக்க கார் ஒன்றை வாடகைக்கு பேசி, ரயில் செல்லும் பாதையை நோக்கி பயணித்தார். இதற்கிடையே, தனது வாட்ஸ்அப் மூலம் மஹோபா ரயில்நிலைய போலீசாருக்கு சிறுமியின் புகைப்படத்தை அனுப்பி நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் ஜான்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உஷாரான போலீசார் அடர்ரா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்றவுடன், அனைத்து பெட்டிகளையும் சோதனை நடத்தினர். இளம்பெண் ஒருவருடன் 4 பேர் கும்பல் அமர்ந்திருப்பதை பார்த்து, அவர்களை சுற்றிவளைத்தனர். அவர்களின் ஒருவன் தப்பிக்க முயன்ற போது, அவனையும் பிடித்தனர். மேற்கண்ட கும்பலை ரயிலில் இருந்து இறக்கி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் பண்டாவில் இருந்து மும்பைக்கு நோக்கி காரில் சென்ற நண்பருக்கு, கடத்தல் கும்பல் சிக்கிய விபரம் தெரிவிக்கப்பட்டது. அவர், கடத்தப்பட்ட நண்பரின் சகோதரியை மீட்டு நண்பன் மற்றும் குடும்பத்தினரை வரச்சொல்லி ஒப்படைத்தார். கடத்தல் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது முஸ்லீம் நண்பரின் சகோதரியை கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்பதற்காக கிட்டதிட்ட 230 கிலோமீட்டர் காரில் பயணித்து, உரிய நேரத்தில் செயல்பட்ட இந்து நண்பரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: