மக்கள் அதிகம் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் ஊரடங்கை தளர்த்தினாலும் கண்காணிப்பு கட்டாயம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால், பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் முழு ஊரடங்கை அமல்படுத்தின. அதன் பலனாக, தற்போது பல்வேறு மாநிலங்களில் பாதிப்பும், பலியும் குறைந்துள்ளன. இதனால், முழு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், சந்தைகள், மார்க்கெட்டுகள், கோயில்கள், மதுக்கடைகளில் மக்கள் கூடுவதால் மீண்டும் கொரோனா  பாதிப்பு அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பு குறைவை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கண்காணிப்பை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும். இதில் அலட்சியம் காட்டிவிடக் கூடாது. மக்களின் வாழ்வாதாரத்திற்கு தளர்வுகள் அவசியம்தான். இருப்பினும் கண்காணிப்பை தவறவிட்டால் மீண்டும் ஆபத்தாகி விடும். அதேபோல், கொரோனா பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ளுதல், தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தல், முகக்கவசம் அணிதலை கட்டாயப்படுத்தல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை மாநில அரசுகளின் தலைமை செயலாளர் கண்காணிக்க வேண்டும்.

சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கும்போது சந்தை மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவை மீண்டும் தீவிர தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், விதிமுறைகளை கடைபிடிப்பதில் எந்தவித விலக்கோ அல்லது சமரசமோ இருக்கக் கூடாது. பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து சிறுகுழுக்கள் மூலம் பரவலை குறைக்க உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

*3 கோடியை நெருங்கிய கொரோனா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை:

* கடந்த 24 மணி நேரத்தில் 60,753 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 2 கோடியே 98 லட்சத்து 23 ஆயிரத்து 546 ஆக உயர்ந்துள்ளது.  

* ஒரே நாளில் புதிதாக 1647 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 86 லட்சத்து 78 ஆயிரத்து 390. கடந்த 37 நாட்களாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

* நாடு முழுவதும் இதுவரை 29 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரத்து 783 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

* மத்திய அரசு செயலாளர் பலி

மத்திய தொழில் மற்றும் உள்வர்த்தகம் துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் குருபிரசாத் மொகாபாத்ரா (59). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். மத்திய அரசில் பணியில் இருக்கும்போது கொரோனாவால் இறந்த முதல் செயலாளர் இவர்தான். இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* வென்டிலேட்டர் வசதியை அறிய புதிய மென்பொருள்

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படும் நோயாளிகளை அடையாளம்  காணவும், அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தேவைகளை முன்கூட்டியே  கண்டறியவும் ‘கோவிட் தீவிரத்தன்மை மதிப்பெண்’ (COVID SEVERITY SCORE) என்ற  புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

* மருத்துவர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை

மத்திய உள்துறை செயலாளர் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளில்  தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த தாக்குதலில் ஈடுபடுபவர்களின் மீது பெருந்தொற்று நோய் திருத்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>