குஜராத்தில் அடுத்தாண்டு பேரவை தேர்தல்; ஆம்ஆத்மி கவுன்சிலர் பாஜகவில் சேர ரூ.3 கோடி பேரம்?.. உடன்படாததால் கணவன் - மனைவி விவாகரத்து

காந்திநகர்: குஜராத்தில் ஆம்ஆத்மி கவுன்சிலர் பாஜகவில் சேர்வதற்கு ரூ. 3 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு கணவர் சம்மதித்த நிலையில் கவுன்சிலர் மனைவி உடன்படாததால், தம்பதியர் விவாகரத்து செய்து கொண்டனர். குஜராத் மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு சரிந்து ஆம்ஆத்மி கட்சி வளர்ந்து வருவதால், அடுத்தாண்டு நடைபெறவுள்ள பேரவை தேர்தலை எதிர்கொள்வதில் பாஜகவுக்கு சவால்கள் அதிகரித்து வருகின்றன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் கூட, சில முக்கியமான பகுதிகளில் பாஜக தோற்றது. அதனால், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களை தங்கள் கட்சியில் இழுக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது.

அந்த வகையில், சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனின் மூன்றாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ரீட்டா துதக்ரா வெற்றி பெற்றார். இவரை, பாஜகவில் இணைப்பதற்காக கம்ரேஜ் தொகுதி எம்எல்ஏ ஜலவாடியா முயற்சிகளை மேற்கொண்டார். பாஜகவில் சேர்வதற்காக ரூ. 3 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கவுன்சிலர் ரீட்டா உடன்படவில்லை. இதற்கிடையே, ரீட்டாவின் கணவர் சிராக் மூலம் பாஜகவில் சேர்வதற்கு காய்கள் நகர்த்தப்பட்டன. மேலும், சிராக்கிற்கு பாஜக சார்பில் ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டதால், தற்போது இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். பாஜகவில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக ஒரு குடும்பமே பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவுன்சிலர் ரீட்டா துதக்ரா கூறுகையில், ‘எனது வெற்றிக்கு பின்னர், என்னை பாஜகவில் இழுக்க கம்ரேஜ் தொகுதி எம்எல்ஏ ஜலவாடியா சில பிரபலங்களை தூது அனுப்பினார். பாஜகவில் சேர்ந்தால் ரூ .3 கோடி தருவதாக கூறினர். நான் மறுத்துவிடவே, எனது கணவரை பாஜகவிற்குள் இழுத்து போட்டனர். என் கணவர் பாஜகவினரிடம் இருந்து ரூ .25 லட்சம் பெற்றுள்ளார். இதனால் எங்களுக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டது.

கடந்த மே 21ம் தேதி நாங்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறோம்’ என்று கூறி, விவாகரத்து செய்ததற்கான ஆவணங்களை செய்தியாளர்களிடம் காட்டினார்.  இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ஜலவாடியா கூறுகையில், ‘ரீட்டா துதக்ரா கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானது. அவரது கணவர் விவாகரத்து செய்துவிட்டார் என்பது இப்போதுதான் கூறுகின்றனர். அவரது கணவருக்கு நான் ரூ. 25 லட்சம் கொடுத்ததாக அவரால் நிரூபிக்க முடியுமா? ஆம் ஆத்மி கட்சி தலைவர்களால் தூண்டிவிடப்பட்ட ரீட்டா, தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்’ என்றார்.

Related Stories: