மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்காததால் சட்ட பாதுகாப்பை இழந்தது டிவிட்டர்: சட்ட விரோத டிவிட்களுக்கு இனி பொறுப்பேற்க வேண்டும்

புதுடெல்லி: இந்தியாவில் சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், ஆன்லைன் செய்தி  நிறுவனங்கள் புகார்களை விசாரிக்க மூன்றடுக்கு குறைதீர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை வகுத்தது. இந்த விதிமுறைகளை ஏற்று நடைமுறைப்படுத்த 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 26ம் தேதியுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், பேஸ்புக், வாட்ஸ் அப், கூகுள், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிமுறையை ஏற்பதாக அறிவித்தன. அதன்படி குறைதீர் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டன.ஆனால், டிவிட்டர் நிறுவனம் மத்திய அரசின் விதிமுறைகளை முறையாக அமல்படுத்தவில்லை. இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை கடந்த 5ம் தேதி இறுதி எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதன் பிறகும் டிவிட்டர் நிறுவனம் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.

  இதன் காரணமாக, அமெரிக்காவை சேர்ந்த டிவிட்டர் நிறுவனம் இந்தியாவில் சட்ட பாதுகாப்பை இழந்திருப்பதாக மத்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த ‘இடைநிலை அந்தஸ்து’ கடந்த மாதம் 26ம் தேதியுடன் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, இனி டிவிட்டரில் மூன்றாம் நபர்கள் பதிவிடும் சட்டவிரோத பதிவுகளுக்கு டிவிட்டர் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும். இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எடுக்கப்படும் தண்டனைகளுக்கு உட்பட வேண்டும். ஒருவேளை டிவிட்டர் நிறுவனம் புதிய விதிகளுக்கு உட்படும் பட்சத்தில் மீண்டும் சட்ட பாதுகாப்பை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத மோதலை உருவாக்குவதாக உபியில் வழக்கு

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் கடந்த 5ம் தேதி அப்துல் சமாத் என்ற இஸ்லாமிய முதியவரை சில இளைஞர்கள் தாக்கினார்கள். மேலும் அவரின் தாடி வெட்டப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இஸ்லாமியர் என்பதால் அந்த முதியவரை ஜெய் ராம் சொல்ல சொல்லி, கொடூரமாக தாக்கியதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த சம்பவத்துக்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காசியாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். டிவிட்டரில் இந்த வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து டிவிட்டர் மீது உபி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மத ரீதியான மோதலை தூண்டியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: