பூதாகரம் எடுக்கும் பாலியல் புகார்!: சென்னை சுசில்ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரை..!!

சென்னை: கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளியை மூட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரைத்துள்ளது. சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. 

அதன்பிறகு இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  சிவசங்கர் பாபா போலீசாருக்கு அஞ்சி அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து தப்பி டெல்லி  வந்து காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி  போலீஸார் கைது செய்து, தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

இதற்கிடையே சுசில்ஹரி பள்ளியில் இருந்து மாணவர்கள் பலர் டி.சி. வாங்க விண்ணப்பித்து வருகின்றனர். ஆசிரியர்களும் விலகி வருகின்றனர். இந்நிலையில், கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளியை மூட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரைத்துள்ளது. பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

மேலும் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க கல்வித்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பரிந்துரை ஏற்கப்பட்டவுடன் இந்த பள்ளியானது அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்படும். தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு அங்கு பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். 

Related Stories: