மேற்குவங்கத்தில் 24 பாஜக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு திரிணாமுல் காங். கட்சிக்கு திரும்ப திட்டம்?

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் 24 பேர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அனுமானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நேற்று கொல்கத்தாவில் பல்வேறு அரசியல் நகர்வுகள் நடந்தேறியுள்ளன. தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாரதிய ஜனதாவில் இணைந்த சுவேந்து அதிகாரி தலைமையில் நேற்று பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள், ஆளுநர் ஜெகதீஷ் தன்கரை சந்தித்தனர். 

ஆனால் மொத்தம் உள்ள 74 பேரில், 24 எம்.எல்.ஏக்கள் பங்கேற்காதது பாரதிய ஜனதா தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 24 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பலர் மீண்டும் கட்சிக்கு திரும்ப போவதாக மம்தாவிடம் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களான ரஜிப் பானர்ஜி, திபென்டு பிஸ்வாஸ் ஆகியோர் மம்தாவின் கட்சிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னாள் மத்திய அமைச்சரும், 5 ஆண்டுகளாக பாரதிய ஜனதாவின் தூணாக இருந்தவருமான முகுல் ராய், மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பிவிட்டார். இவரை தொடர்ந்து பல எம்.எல்.ஏக்கள் திரிணாமுல்லுக்கு திரும்புவது உறுதியாகி உள்ளது. ஆனால் இவர்கள் மீது கட்சி தாவும் தடை சட்டம் பாயும் என்று சுவேந்து அதிகாரி எச்சரித்துள்ளார். இதனிடையே தாங்கள் பாரதிய ஜனதாவுக்கு சென்றது தவறு தான் என கூறி நிர்வாகிகள் பலர் கடந்த வாரம் வீதிகளில் நின்று மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>