3 மாதத்தில் முடிந்த ‘பேஸ்புக்’ காதல் திருமணம்: போலீஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

பாட்னா: பீகாரில் பேஸ்புக் நட்பில் நடந்த காதல் திருமணத்தில் தம்பதியருக்குள் பிரச்னை ஏற்பட்டதால் போலீஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த ரவி ராஜ் என்பவர், பாட்னாவில் உள்ள டவுன் போலீஸ் ஸ்டேசனில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது பேஸ்புக் காதலி புஷ்பா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஆராவில் உள்ள போலீஸ் குடியிருப்பில் ரவி ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, போலீசார் கூறுகையில், ‘ரவி ராஜூம் புஷ்பா குமாரியும் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பாட்னாவில் முதல் முறையாக சந்தித்தனர்.  

தொடர்ந்து பிப்ரவரி 14ம் தேதி (காதலர் தினம்) இரண்டாவதாக சந்தித்தனர். பேஸ்புக், செல்போன் மூலம் இருவரும் காதலித்து வந்தனர். ஒரு மாதம் கழித்து, மார்ச் 14 அன்று இருவரும் ஃபதுஹாவில் உள்ள பைக்கெட் குண்ட் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான மூன்று மாதங்களுக்குள் இருவரும் பாட்னாவில் வாடகை வீடு பேசி வசித்து வந்தனர். இந்தநிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால், மனமுடைந்த ரவி ராஜ் தான் பணியாற்றும் ஆரா காவல் நிலையத்திற்கு வந்தார். பின்னர் காவல் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகிறோம்.

பேஸ்புக் மூலம் தொடங்கிய காதல் கதை, மூன்று மாதங்களுக்குள் முடிந்தது. இருப்பினும், இருவருக்கும் என்ன பிரச்னை என்பது முழுமையாகத் தெரியவில்லை. அவரது மனைவி புஷ்பா குமாரியிடம் விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: