பாதுகாப்பு துறையில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

டெல்லி: பாதுகாப்புத் துறையில் புத்தாக்க சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பாதுகாப்புத்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகள், புத்தாக்க சிந்தனைகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப்களுக்கு பட்ஜெட் நிதி ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் 300 ஸ்டார்ட்அப்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள், தனி நபர் கண்டுபிடிப்பாளர்கள் பயன்பெறுவர் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களை சர்வதேச அளவில் அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையை மாற்றுவதற்காக பெரும்பாலானவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.75 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாட உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு சாதனங்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ராணுவ திறன், பாதுகாப்பு புத்தாக்க நிறுவனத்துக்கு (டிஐஓ) இந்த ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மற்றும் விமானப்படைக்கான விமானங்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். டிஐஓ வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி செயல்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் பங்குதாரர் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தளங்களை உருவாக்க (இன்குபேட்டர்) இந்நிதியிலிருந்து ஆதரவு பெறலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு சுயசார்பு பொருளாதாரத்தை முன்னோக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை முன்னெடுக்கும் விதமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்லேயே 101 ராணுவ தளவாட சாதனங்கள் மற்றும் அதற்கான தளங்கள், விமானப்படை விமானங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், குரூயிஸ் ஏவுகணைகள் உள்ளிட்டவை இறக்குமதி செய்வது 2024-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைக்கப்பட உள்ளது. இதை எட்டும் வகையில் இந்தக்கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 108 வகையான ராணுவ பாதுகாப்பு சாதனங்கள், அது சார்ந்த பொருட்கள், அடுத்த தலைமுறை கன்வெர்ட்டர்கள், ஏடபிள்யூஎஸ், பீரங்கிகளுக்கான இன்ஜின்கள், ரேடார்கள் உள்ளிட்டவற்றையும் உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: