ஜோலார்பேட்டை பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை பகுதியில் கொரோனா  நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2வது தவணை மற்றும் நிவாரண உதவி வழங்குவதற்கான டோக்கன்களை நியாய விலை கடை  விற்பனையாளர்கள் நேற்று முன்தினம் வீடு வீடாக  சென்று டோக்கன் வழங்கினர். கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள பொது மக்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் வழங்கப்படுமென அறிவித்து முதல் தவணையாக ₹2000 கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.  

மேலும்  கொரோனா நிவாரண தொகை 2வது தவணையாக ₹2 ஆயிரம் மற்றும் 13 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு அதாவது, கோதுமை மாவு, ரவை, உளுத்தம்பருப்பு, புளி, கடலைப்பருப்பு, சீரகம், கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், டீ தூள், குளியல் சோப்பு, துணி சோப்பு, உப்பு, சர்க்கரை, உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வரும் 15ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.

இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மூலம் சந்தைக்கோடியூர் பொன்னேரி மண்டலவாடி பள்ளத்தூர் குன்னத்தூர்  உள்ளிட்ட 9 ரேஷன் கடைகளில் மூலம் 5,979 குடும்ப அரிசி அட்டை தாரர்களுக்கு வழங்க சங்க செயலாளர் சம்பத் தலைமையில் சந்தைக்கோடியூர் ரேஷன் கடை விற்பனையாளர் பரிமளா நேற்று முன்தினம் காலை முதல் வீடு வீடாக சென்று 1,050 குடும்ப அரிசி அட்டை தாரர்களுக்கு  கொரோனா நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன்களை வழங்கினார்.

Related Stories: