புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பை எதிர்த்து பாஜவினர் முதலில் கருப்பு கொடி காட்ட வேண்டும்: தமிழகத்தை பற்றி பிறகு பேசலாம்; மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை:  புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பை எதிர்த்து கருப்பு கொடி காட்டிவிட்டு தமிழகத்தில் வந்து போராட்டம் நடத்தட்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, கிண்டியில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கருவி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 3,26,573 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல்வர் அடுத்த வாரம் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார், அப்போது தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை கேட்டு பெற்று அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். பெற்றோர்களை இழந்திருக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தான் மட்டும்தான் மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்குகிறது.

கொரோனாவால் இறந்த அனைவருக்கும் மத்திய அரசிடம் பாஜவினரே கேட்டு நிவாரணம் வழங்கப்படுகிறதோ என்று கேட்டு மக்களுக்கு தெளிவு படுத்துங்கள். கடந்த ஆட்சியில் ஊரடங்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில் மதுக்கடைகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டது. தற்போது அந்த நிலை இல்லை. மேலும் பாஜ பங்கு பெற நினைக்கும் புதுச்சேரியில் என்ன நிலை அங்கு கேட்டு விட்டு, கருப்பு கொடி காட்டி விட்டு தமிழகத்துக்கு வரட்டும். கடந்த 35 நாட்களுக்கும் மேலாக நாங்கள் யாரையும் விமர்சனமே செய்யவில்லை. மேலும் முதல்வர் எங்களிடம்  விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும், அதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும், விமர்சனங்கள் மீது தவறு இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும், நியாயம் இருந்தால் அதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளார். மற்ற கட்சியினர் கேட்பதற்கு தான் பதில் அளிக்கிறோம். யாரையும் விமர்னம் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* பாஜவினர் கூடுதல் தடுப்பூசி வாங்கி தர வேண்டும்

சுகாதார துறை அமைச்சர் மேலும் கூறுகையில், ‘‘தமிழகத்துக்கு அரசு பணம் கொடுத்து வாங்கிய தடுப்பூசியும் சேர்த்து இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 30 வந்துள்ளது. அதில் 1 கோடியே 1 லட்சத்து 30,594 பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பு 5 லட்சத்து 39 ஆயிரத்து 780 உள்ளது. தற்போது இரண்டு நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு  உள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்கு தேவையான தொகுப்புகளை தருவார்கள் என்று நம்புகிறோம். தடுப்பூசி வரும் பட்சத்தில் விரைந்து மக்களுக்கு தடுப்பூசி  செலுத்தப்படும். மேலும் பாஜக தலைவர்களுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் வலியுறுத்தி கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுக்  கொடுங்கள் எவ்வளவு பெற்றுக் கொடுத்தாலும் அதை போடுதவற்கு இந்த துறையின் அலுவலர்கள் தயாராகவே உள்ளோம்’’ என்றார்.

Related Stories: