இசட் பாதுகாப்பை திரும்ப பெறுங்கள்: மத்திய அரசுக்கு முகுல்ராய் கடிதம்

புதுடெல்லி: தனக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறும்படி பாஜ.வில் இருந்து திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்திருக்கும் முகுல் ராய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் ராய், கடந்த 2017ம் ஆண்டு பாஜ.வில் இணைந்தார். அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவியை பாஜ வழங்கியது. மேலும், மேற்கு வங்கத்தில் அவர் தாக்கப்படும் அபாயம் இருந்ததால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பையும் அளித்தது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கிருஷ்ணா நகர் அட்டர் தொகுதியில் போட்டியிட்டு திரிணாமுல் வேட்பாளரையும் முகுல் ராய் வெற்றி கொண்டார். முன்னதாக, பாஜ.வுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையிலான மோதல், தேர்தலுக்கு முன்பாக உச்சக்கட்டத்தில் இருந்தது.

இதனால், முகுல் ராய்க்கு நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்படும் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசிலேயே முகுல்ராய் இணைந்தார். இதன் மூலம், பாஜ.வுக்கு இக்கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளுபடி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முகுல் ராய் நேற்று கடிதம் எழுதினார். எனினும், இது குறித்து மத்திய அரசு எந்த முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை.

Related Stories:

>