அதானி துறைமுகங்களுக்கு குஜராத் பாஜ அரசு சலுகை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: குஜராத்தில் உள்ள துறைமுகங்களை அதானி நிறுவனம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் விதமாக ஏகபோக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: குஜராத்தில் உள்ள முந்த்ரா,ஹசீரா மற்றும் தாஹேஜ் துறைமுகங்களை கட்டி எழுப்பி, இயக்குவது மற்றும் திருப்பி ஒப்படைப்பது என்ற பூட் திட்டத்தின் கீழ் 75 ஆண்டுகளுக்கு அதானி நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. துறைமுக துறையில் அதானி நிறுவனத்தின் ஏகபோகத்தை பாதுகாக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள துறைமுகங்களை அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனி உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பூட் திட்டத்தின்படி 3 துறைமுகங்களுக்கான உரிமையை தற்போதைய 30 ஆண்டில் இருந்து 75 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்று குஜராத் கடல்சார் வாரியத்துக்கு அதானி நிறுவனம் கோரிக்கை விடுத்தது.

ஆனால், புதிய டெண்டர்கள் கோர குஜராத் கடல்சார் வாரியம் அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால், குஜராத் கடல்சார்வாரியத்தின் பரிந்துரைகளை முதல்வர் தலைமையிலான குஜராத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் நிராகரித்தது. தற்போது முந்த்ரா, ஹசீரா மற்றும் தாஹேஜ் துறைமுகங்களை 75 ஆண்டுகள் கட்டுப்படுத்துவதற்கு அதானி நிறுவனத்துக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சலுகை காலம் முடிந்த பிறகு அதானி நிறுவனம் ஒரு ஆண்டுக்கு ரூ.1700 கோடி உரிமை தொகை செலுத்த வேண்டும் என்று முதலில் மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த தொகை ஆண்டுக்கு வெறும் ரூ.340 கோடி மட்டும்தான் என்று கம்பெனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post அதானி துறைமுகங்களுக்கு குஜராத் பாஜ அரசு சலுகை: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: