* பஜ்ரங்தளம் தொண்டர்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
இந்தூர்: இந்தூரில் அரைகுறை ஆடையுடன் துபாய் இளம்பெண் வீதிஉலா வந்ததற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பிரபல தெரு உணவு சந்தைகள் அமைந்துள்ள மெக்தூத் சாட்-சௌப்பட்டி மற்றும் 56 டுகான் சாட்-சவுப்பட்டி பகுதிகளில் அரைகுறை ஆடைகளுடன் ஒரு பெண் சுற்றித்திரிகிறார். அந்த வீடியோக்களை அவர் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளார். அதில் பலர் அவரை ரசித்துப்பார்ப்பது பதிவாகி உள்ளது. இதற்கு மபி பா.ஜ அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,’ இந்தூர் போன்ற கலாச்சார நகரத்தில் இதுபோன்ற அநாகரீகம் நடக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு அவர்களின் விருப்பப்படி வாழவும் சாப்பிடவும் சுதந்திரம் அளிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அத்தகைய சுதந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவதால் சமூகம் மோசமாகப் பாதிக்கப்பட்டால், அது அடிப்படை உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு சமம்’ என்றார். இதையடுத்து பஜ்ரங் தளம் மற்றும் சில பெண்கள் அமைப்புகள் அந்த இளம் பெண் மீது புகார் தெரிவித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டன.
இதனால் பிரச்னை விஸ்வரூபமானது. இதை தொடர்ந்து நேற்று அந்த இளம் பெண் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார். இந்தியில் பேசிய அவர், தான் துபாயில் வசிப்பதாக தெரிவித்தார். அவர் கூறுகையில்,’பொது இடங்களில் இதுபோன்ற குட்டையான ஆடைகளை அணிந்திருக்கக் கூடாது என்பதைஉணர்ந்து கொண்டேன். இனிமேல் இதை செய்ய மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். நான் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்றார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
The post இந்தூரில் அரைகுறை ஆடையுடன் உலா துபாய் இளம்பெண்ணுக்கு பா.ஜ அமைச்சர் மிரட்டல் appeared first on Dinakaran.