சட்டவிரோத சுரங்க வழக்கில் அரியானா காங்கிரஸ் எம்எல்ஏ கைது ரத்து: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சண்டிகர்: சட்டவிரோத சுரங்க வழக்கில் அரியானா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வாரை அமலாக்கத்துறை கைது செய்ததை பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அரியானா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார். அங்குள்ள யமுனாநகரில் சட்டவிரோத சுரங்கம் மூலம் ரூ.26 கோடி பணம் பெற்றதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கில் அவரை கடந்த ஜூலை 20ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் சோனிபட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சுரேந்தர் பன்வார் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தன்னை கைது செய்து சிறையில் அடைத்தது சட்டவிரோதமானது என்று அறிவிக்க கேட்டு பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி மஹாபீர் சிங் சிந்து விசாரித்து அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அப்போது அமலாக்கத்துறையை நீதிபதி கடுமையாக கண்டித்தார்.

நீதிபதி மஹாபீர்சிங் சித்து தனது 37 பக்க உத்தரவில் கூறியிருப்பதாவது: அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு சில நியாயமான காலக்கெடுவை எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற துன்புறுத்தல்களை செய்யக்கூடாது. மனுதாரர் (பன்வார்) முதல் பார்வையில், சட்டவிரோத பணப்பறிமாற்ற சட்டத்தின் கீழ் பணமோசடி குற்றத்தை ஈர்க்கும் வகையில், எந்தவிதமான சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை. அதனால் அவருக்கு எதிராக அமலாக்கத்துறையால் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவு மற்றும் கைதுக்கான காரணங்கள், அம்பாலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இரண்டு ரிமாண்ட் உத்தரவுகள் ரத்துசெய்யபடுகின்றன.

எனவே மனுதாரரை உடனடியாக விடுவிக்க வேண்டும். சட்டவிரோத சுரங்கம் என்பது சட்டவிரோத பணப்பறிமாற்ற சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றம் அல்ல. எனவே மனுதாரர் (பன்வார்) மீது அதன் அடிப்படையில் வழக்குத் தொடர முடியாது. அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் அமலாக்கத்துறையிடம் இல்லை. இந்த சூழலில் ஜூலை 19ம் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 20ம் தேதி அதிகாலை 1.40 மணி வரை பன்வாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இது அமலாக்கத்துறை காட்டிய வீரம் இல்லை.

மாறாக இது ஒரு மனிதனின் கண்ணியத்திற்கு எதிரானது. எதிர்காலத்தில், அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் இந்த நீதிமன்றத்தின் ஆணையைக் கருத்தில் கொண்டு, அமலாக்க இயக்குனரகம் சரிசெய்தல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வழக்கில் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணைக்கு சில நியாயமான காலக்கெடு அமலாக்கத்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். மிகச்சரியாக சொல்வதானால், தேவையற்ற துன்புறுத்தலைச் சந்திப்பதற்குப் பதிலாக, மனித உரிமைகளின்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நியாயமான விசாரணைக்கு சில தேவையான வழிமுறைகள் அமைக்கப்பட்டால் அது பாராட்டத்தக்கது. அதே சமயத்தில் அம்பாலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த புகாரின் தகுதி பற்றிய கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவைக் கருதக்கூடாது. இவ்வாறு நீதிமன்றம் உத்தவிட்டது.

The post சட்டவிரோத சுரங்க வழக்கில் அரியானா காங்கிரஸ் எம்எல்ஏ கைது ரத்து: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: