திருப்பதியில் 10 நாளில் 36 லட்சம் லட்டுகள் விற்பனை: தேவஸ்தான அதிகாரிகள் தகவல்

திருமலை: திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டாலும், கடந்த 10 நாளில் 36 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், கூடுதலாக லட்டு தயாரிக்கும் தேவை உள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக கடந்த 19ம் தேதி அன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் கடந்த 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 78 ஆயிரத்து 690 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், 19ம் தேதி 68 ஆயிரத்து 835 பேர் மட்டுமே தரிசனம் செய்தனர். இருப்பினும், கடந்த 20ம் தேதி அன்று, வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 104 ஆக அதிகரித்தது. தொடர்ந்து, 21ம் தேதி 82 ஆயிரத்து 406 பக்தர்கள், 22ம் தேதி 82 ஆயிரத்து 646 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்நிலையில், கடந்த 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை தினமும் சராசரியாக 3.50 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் 36 லட்சத்து 4 ஆயிரத்து 617 லட்டுகள் பக்தர்கள் வாங்கி சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருப்பதியில் 10 நாளில் 36 லட்சம் லட்டுகள் விற்பனை: தேவஸ்தான அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: