நடுக்கடலில் இத்தாலி கடற்படை வீரர்களால் மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு முடிவுக்கு வருகிறது: 15ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு

திருவனந்தபுரம்: நடுக்கடலில் இத்தாலி கடற்படையினரால் குமரி, கேரள மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு முடிவுக்கு வருகிறது. குமரி மாவட்டத்தை சேர்ந்த அஜேஸ்பிங்கி, கொல்லத்தை சேர்ந்த ஜெலஸ்டின் உட்பட மீனவர்கள், 2012ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி விசைபடகில் கொல்லம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இத்தாலி சரக்கு கப்பலில் பாதுகாப்புக்காக வந்த அந்நாட்டு கடற்படை வீரர்களான மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே ஆகியோர் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அஜேஸ்பிங்கி, ஜெலஸ்டின் பலியாகினர். சில மீனவர்கள் காயமடைந்தனர். படகும் சேதமடைந்தது. இந்திய கடற்படையினர் அந்த சரக்கு கப்பலை மடக்கி, மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், இத்தாலி அரசின் கோரிக்கையை ஏற்று சர்வதேச தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 வீரர்களும் விடுவிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்டஈடாக முதலில் ரூ.2.14 கோடி இத்தாலி அரசு வழங்கியது. பின்னர், ரூ.10 கோடி வழங்கியது. இதை ஏற்க முடியாது என்று பலியான மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால், வழக்கு தொடர்ந்து நடந்தது. இந்நிலையில், நஷ்டஈடு தொகையை ஏற்பதாக 2 மீனவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனால், வழக்கை முடித்து வைப்பது பற்றி நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு  வரும் 15ம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்துள்ளது. அன்று இந்த வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 மீனவர்களுக்கு தலா ரூ.4 கோடி

இத்தாலி அரசு வழங்கியுள்ள ரூ.10 கோடி நஷ்டஈடு தொகையில், கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 கோடியும், விசைப்படகின் உரிமையாளருக்கு  ரூ.2 கோடியும் பிரித்து வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories: