தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கட்டை விரலை துண்டாக்கிய நர்ஸ்

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் டிரிப் லைனை கத்தரிக்கோலால் நர்ஸ், நறுக்கிய போது பச்சிளம் பெண் குழந்தையின் கட்டை விரல்  துண்டானது. தஞ்சாவூர் அருகே காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (34). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி(20). திருமணாகி ஒரு வருடமாகிறது. இந்நிலையில், 9 மாத கர்ப்பமாக இருந்த பிரியதர்ஷினிக்கு கடந்த 25ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குறைமாத பிரசவம் என்பதால் குழந்தையின் வயிற்றில் கோளாறு இருப்பதாக கூறி தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குழந்தையின் இடது கையில் டிரிப் லைன் மூலம் (வென்பிளான்) ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இந்நிலையில், குழந்தை ஆரோக்கியமாக இருந்ததால் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக குழந்தையின் கையில் உள்ள டிரிப்லைனை நர்ஸ் ஒருவர், கத்தரிக்கோலால் நறுக்கும்போது குழந்தையின் கட்டை விரல் துண்டானது.

குழந்தையின் கையில் இருந்து ரத்தம் கொட்டியதை கண்ட தாய் பிரியதர்ஷினி கதறி அழுதார். இதைத்தொடர்ந்து குழந்தையின் கையில் மீண்டும் தையல் போடப்பட்டது. இது குறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிக்குமார் கூறுகையில், நர்சிடம் உரிய விசாரணை நடத்தப்படும். நர்ஸ் அலட்சியத்தால் குழந்தையின் விரல் துண்டானது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.

Related Stories: