புதுவையில் மீண்டும் மோதல் பாஜவிடம் முதல்வர் ரங்கசாமி கறார்

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றும் அமைச்சரவை பதவியேற்பில் கடும் இழுபறி நீடித்து வந்தது.  கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தலையிட்டதன் காரணமாக சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகளை கொடுக்க முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில், பாஜ மேலிட பொறுப்பாளரான  ராஜீவ் சந்திரசேகரராவ் ரங்கசாமியை சந்திக்க புதுச்சேரி வந்தார். தொடர்ந்து 3 மணியளவில் திலாஸ்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்த ராஜீவ்சந்திரசேகர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.  பின்னர் இருவரும் அரைமணி நேரம் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியே வந்த பாஜக மேலிடப்பொறுப்பாளரிடம் கேட்டபோது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக்கூறி புறப்பட்டு சென்றார்.  

பேச்சுவார்த்தையின்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறியபடி சபாநாயகர், 2 அமைச்சர்கள் தொடர்பாக மட்டும் இப்போது  பேசுவோம். துணை முதல்வர் உள்ளிட்ட பதவிகள் குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம் என ரங்கசாமி கறாராக கூறியுள்ளார். இது குறித்து என். ஆர் காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது:  அமைச்சர்கள் யார்? என்ற பட்டியலை ரங்கசாமியிடம் கொடுக்கவில்லை. சபாநாயகராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக பாஜக எம்எல்ஏக்களிடம் ஒருமித்த கருத்து இன்னமும் வரவில்லை. எனவே  மீண்டும் சந்திப்பதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார் என்று தெரிவித்தனர்.

சபாநாயகர் பதவி வேண்டாம் அமைச்சர் தான் வேணும்

புதுச்சேரியில் சபாநாயகர் பதவிக்கு நியமன எம்எல்ஏ ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இத்தகவல்  தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே பாஜக எம்எல்ஏக்களுடன் மேலிடப்பொறுப்பாளர் சந்திரசேகர் ராவ் தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினார். அப்போது,    நியமன எம்எல்ஏவுக்கு சபாநாயகர் பதவி கொடுப்பது தவறான முன்னுதாரணத்தை  ஏற்படுத்தி விடும்.  இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.  அமைச்சர் பதவிதான் வேண்டும் என்று பெரும்பாலான எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: