கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இன்று அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழுஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது குறைவான நேரம் கடைகள் திறப்பது உள்ளிட்ட சிறிதளவு தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வேகம் எடுத்தது. மே 2ம் தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது. சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக இருந்தது. இந்த நிலையில், மே 7ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், அன்று முதல் இன்று வரை பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினார். பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்களை நியமித்து தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டார். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தினசரி பாதிப்பு பெரிய அளவில் குறையவில்லை.

இதற்கு காரணம், அரசு அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கவில்லை என்பதே. இதனால், சென்னை போன்று வெளி மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்தது. தினசரி பாதிப்பு 40 ஆயிரம் வரை அதிகரித்தது. குறிப்பாக, கிராமங்களில் பெரும்பாலானோர் மாஸ்க் அணியாததால் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டு இருந்தது. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம், மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அந்த மாவட்டங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தனி கவனம் செலுத்துமாறு கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் 22ம் தேதி மருத்துவ நிபுணர்கள் மற்றும் அனைத்துக்கட்சி சட்டமன்ற  தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் குழுவுடனும் ஆலோசனை நடத்தினார். அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு மே 31ம் தேதி காலை 6 மணியுடன் முடிந்தது. ஆனாலும் தமிழகத்தில் தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. இதையடுத்து, தளர்வில்லா முழு ஊரடங்கு வரும் 7ம் தேதி (நாளை மறுதினம்) காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இரண்டாவது தளர்வில்லா முழு ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கால் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் வாகனங்களில் வீதி வீதியாக காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர் மட்டுமே பணிக்கு சென்று வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்றினால் 22,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை நேற்றைய பாதிப்பு 1,971 ஆக இருந்தது. கோவையில் அதிகபட்சமாக 2810 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இது முந்தைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். நாளுக்கு, நாள் புதிதாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 33,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதை பார்க்கும்போது அரசின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. மக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க கொரோனா நிவாரண நிதி முதல்  தவணையாக 2 ஆயிரம் வழங்கப்பட்டது. 2வது தவணையாக மேலும் 2 ஆயிரம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

 இந்த சூழ்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.30 மணியளவில் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போலீஸ் டிஜிபி திரிபாதி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதையும், தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முதல்வரிடம் முன்வைத்தனர். அப்போது, தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.  அப்போது பேசிய அதிகாரிகள், ‘‘தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் இன்னும் தினசரி பாதிப்பு 22 ஆயிரம் என்ற நிலை உள்ளது. இதனால் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும். அதேநேரம், பொதுமக்கள் தற்போது கடைகளுக்கு சென்று நேரடியாக பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.

அதனால் நோய் தொற்று குறைந்த பகுதிகளில் காலையில் குறிப்பிட்ட நேரம் மட்டும் காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்க அனுமதி அளிக்கலாம். குறிப்பாக, கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களான தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவிக்கலாம். நோய் தொற்று ஆயிரத்துக்கும் அதிகம் உள்ள கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தளர்வுகள் எதுவும் இல்லாத ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தற்போதுள்ள முழு ஊரடங்கை நீடிப்பது என்றும், அதேநேரம் கடைகளை குறைந்த நேரம் திறக்க அனுமதிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.  சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களை கேட்டுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கலாமா, அப்படியே நீட்டித்தாலும் சிறிய அளவு தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

*  தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று  குறைந்து வந்தாலும் இன்னும் தினசரி பாதிப்பு 22 ஆயிரம் என்ற நிலை உள்ளது. இதனால் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும். நோய் தொற்று குறைந்த பகுதிகளில் காலையில் குறிப்பிட்ட நேரம் மட்டும் காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்க அனுமதி அளிக்கலாம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: