அனைவரிடமும் 2 நாள் கருத்து கேட்கப்படும் பிளஸ் 2 தேர்வு குறித்து முதல்வர் அறிவிப்பார்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சென்னை: பொதுமக்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்ட பிறகு பிளஸ் 2 தேர்வு தொடர்பாக இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்த வேண்டிய பிளஸ் 2 தேர்வு நடத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.  இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிருபர்களிடம் கூறியதாவது: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12ம் வகுப்புக்கான தேர்வு இந்த ஆண்டு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து என்று சொல்லவில்லை. ஆனால் மாணவர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பு முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.  

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  தலைமையில் கடந்த வாரம் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், எல்லா மாநிலங்களும் தேர்வு நடத்த வேண்டும் பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்று தெரிவித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தேர்வை ரத்து செய்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடத்த கூட்டதுக்கான கடிதத்தில், வாய்ப்பு 1, வாய்ப்பு 2 என்று குறிப்பிட்டு, எப்படி எல்லாம் இந்த தேர்வை நடத்தலாம் என்றும் நேரத்தை குறைக்கலாமா, மாணவர்களுக்கு ஏற்ப தேர்வு மையங்களை அதிகரிக்கலாமா என்பது போன்ற வாய்ப்புகளை அவர்கள் கொடுத்திருந்தனர். இவை சிபிஎஸ்இ மாணவர்களை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டு இருந்தன. அதற்கு நாங்கள் பதில் அளிக்கும் போது,  மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களையும் கருத்தில் கொண்டு சில க ருத்துகளை கொடுத்திருக்க வேண்டும் என்று நாங்கள் பதில் அளித்து  இருந்தோம்.  

ஆனால் ஒட்டுமொத்தமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் உள்ள 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளனர். தமிழக முதல்வரின் கருத்து என்பது இதை ரத்து செய்வதற்கு முன்பாக, கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், மாணவர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்களை போன்றோரை அழைத்து எப்படி கருத்து கேட்டோமோ அதே போல, வரும் இரண்டு  நாட்களில் அவர்களிடம் கருத்து கேட்டு அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு, அத்துடன் மற்ற மாநிலங்களின் நிலைப்பாடு என்ன என்பதையும்  பார்த்து  2  நாளில் அதற்கான சிறந்த இறுதி முடிவை எடுக்கலாம் என்று ம் முதல்வர் சொல்லியிருக்கிறார். அந்த  வகையில் 2  நாளில் இதற்கான கூட்டங்களை  முடிக்க திட்டமிட்டுள்ளோம். முடிந்தவரையில் இன்று மாலையே Zoom Call கூட்டத்தை நடத்தலாமா என்றும் பேசி வருகிறோம். ‘Zoom Call’ கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடியாக வரவழைத்து கேட்கலாம்.

முதல்வர் 2 நாளில் கருத்து கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.  அதன்படி 2  நாளில் வரும் கருத்துகளின் அடிப்படையில் நமது மாநிலத்துக்கு என்ன தேவையோ அதை கண்டிப்பாக செய்வார். மாணவர்களின் சங்கங்களை அழைத்து கருத்து கேட்டோம். அதேபோல  இப்போதும் செய்வோம்.  மாணவர்கள் தரப்பில் சிலர் தேர்வு வேண்டும் என்கின்றனர். சிலர்  வேண்டாம் என்கின்றனர். இது போல கலப்படமாக கருத்து தெரிவிக்கின்றனர். 2 நாளில் வரப் பெறும் கருத்தில் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை பார்ப்போம். மதிப்பெண்களை மதிப்பீடு செய்வது மிக முக்கியமாக இருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்களின் உடல் நலனும் முக்கியம். அந்த நிலையில் தான் தமிழகம்  இருந்து வருகிறது. திடீரென்று தேர்வு ரத்து என்று அறிவித்த பிரதமரும் நாங்கள் நல்ல முறையில் மதிப்பெண்களை மதிப்பீடு செய்வோம். அதிலும் தெளிவு இல்லை.  இவற்றை எல்லாம் முதல்வரிடம் எடுத்து சொல்லி அவர் இறுதியில் என்ன சொல்கிறாரோ அதுமாதிரி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: