அசாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கொரோனா நோயாளி!: ஆத்திரத்தில் மருத்துவரை சரமாரியாக அடித்து உதைத்த உறவினர்கள்.. பதைபதைக்கும் காட்சி வெளியீடு..!!

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியரை அடித்து உதைக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அசாம் மாநிலத்தில் ஹோசே பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சுமார் 20 பேர் இணைந்து சிகிச்சை அளித்த மருத்துவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் மருத்துவமனையில் இருந்து வெளியே இழுத்து  சென்றும் அவர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். 

இதனை தடுக்க முயன்ற மருத்துவமனை ஊழியரும் தாக்கப்பட்டார். தற்போது இந்நிகழ்வின் வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலுக்கு இந்திய மருத்துவ கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதுடன் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கழகம் அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்யாவிட்டால் வெளிநோயாளிகளை புறக்கணிக்க போவதாக இந்திய மருத்துவ கழகத்தின் ஹோசே பகுதி கிளை அறிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவர் குமாரை தாக்கிய அனைவரையும் உடனடியாக கைது செய்ய காவல்துறைக்கு அசாம் முதலமைச்சர் ஹேமந்தா உத்தரவிட்டுள்ளார். 

Related Stories: