ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா 2ம் அலையில் சிக்கி நாடு முழுவதும் 594 டாக்டர்கள் உயிரிழப்பு!: இந்திய மருத்துவ சங்கம் தகவல்..!!

டெல்லி: கொரோனா வைரஸின் 2ம் அலையில் சிக்கி நாடு முழுவதும் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 26 மாநிலங்களில் இதுவரை 594 மருத்துவர்கள் கொரோனா 2ம் அலைக்கு பலியாகி இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் 107 டாக்டர்கள் கொரோனாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் 96 மருத்துவர்கள் மக்கள் சேவையில் உயிர் நீத்திருக்கின்றனர். உத்திரபிரதேசத்தில் 67 மருத்துவர்களும், ராஜஸ்தானில் 43 மருத்துவர்களும் கொரோனா 2வது அலைக்கு பலியாகியிருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது. 

இதேபோல் ஜார்கண்ட், காஷ்மீரில் 39 பேர், ஆந்திரா 32, குஜராத் 31 பேரும் கொரோனா கொல்லுயிரிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவ சேவையாற்றி வந்த மருத்துவர்கள் 21 பேர் கொரோனா 2ம் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன் நின்று பணியாற்றும் டாக்டர்களும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் பலருக்கும் நோய்தொற்று ஏற்பட்டு உயிரிழப்பது வருத்தமளிக்கிறது.

Related Stories: