9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பு பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றிய பாடம்!!

சென்னை : 10ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த திமுக அரசு, பாடப்புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முதுப்பெரும் தலைவருமான கலைஞரின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவித்தது. கடந்த 2023-24ம் கல்வியாண்டின் போது தமிழக அரசின் பாடத்திட்டத்தின்படி உள்ள 9ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் “பன்முகக் கலைஞர்” என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் குடிமையியல் என்ற பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் என்ற தலைப்பில் இந்த பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம், கை ரிக்ஷா ஒழிப்பு திட்டம், மதிய உணவு திட்டம், சுயமரியாதை திருமண சட்டம், விலையில்லா மிதிவண்டி திட்டம் உள்ளிட்டவையும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது. இது வரும் ஜூன் மாதம் மாணவர்களுக்கு வழங்க உள்ள பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post 9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பு பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றிய பாடம்!! appeared first on Dinakaran.

Related Stories: